அரசு பள்ளிகளில் வேளாண் அறிவியல் கல்வியை அறிமுகப்படுத்த கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 2, 2022

அரசு பள்ளிகளில் வேளாண் அறிவியல் கல்வியை அறிமுகப்படுத்த கோரிக்கை!

வேளாண் அறிவியல் கல்வி

வேளாண் அறிவியல் கல்வியை அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் 10வது மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் மாதவன் தலைமை வகித்தார். செயலாளர்கள் பகுத்தறிவு மற்றும் பாபுகுமார், பொருளாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞர் பிரகலாத்ரவி வாழ்த்துரை வழங்கினார் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோபிநாதன் சுரேஷ் வரவேற்றனர். இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வேளாண் பட்டதாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 6 முதல் 12ம் வகுப்பு வரை அறிமுகம்

கூட்டத்தில், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் வேண்டுகோள்களை ஏற்று, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1984ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த 47 இடங்களை, இந்த கல்வியாண்டு முதல் 98 இடங்களாக உயர்த்தப்பட்டதற்கும், வேளாண் அறிவியல் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணைவு பெற்ற தனியார் கல்லூரிகளிலும் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியமைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 5 சதவீத இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியமைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், வேளாண்மை அறிவியல் கல்வியை அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அறிமுகம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதியின் அடிப்படையில் வேளாண்மை பட்டதாரிகளை முதுநிலை ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும், பள்ளிக்கல்வித்துறையில் வேளாண் ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களையவும், வேளாண் அறிவியல் பாடத்திட்டத்தினை மேலும் வலுப்படுத்தவும் வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்ட செயலாளர் அல்லாபக்க்ஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.