பல்கலைகளில் நிர்வாக குளறுபடி கவர்னரிடம் குவியும் கடிதங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 9, 2022

பல்கலைகளில் நிர்வாக குளறுபடி கவர்னரிடம் குவியும் கடிதங்கள்

தமிழகத்தில் இருக்கும், அரசு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் நிர்வாக செயல்பாட்டை கண்காணிக்க, கவர்னர் ரவிக்கு உதவ, பிரசன்ன ராமசாமி என்பவர் துணை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவர் பதவி ஏற்றதும், தமிழக பல்கலை நிர்வாகம் குறித்த விபரங்களை விசாரிக்க துவங்கி உள்ளார்.இதையடுத்து, அவருக்கு பல்கலை நிர்வாக குளறுபடிகள் தொடர்பாக, ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. அதுபற்றி, கவர்னர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பல்கலைகளின் நிர்வாகம் அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்பதில், கவர்னர் ரவி உறுதியாக உள்ளார். அதற்காக, பல்கலை துணைவேந்தர்களுடன் பேசியுள்ளார். இந்நிலையில், பல்கலை நிர்வாகங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்க, துணை செயலர் அந்தஸ்தில், பிரசன்ன ராமசாமியை நியமித்துள்ளார். அவர் நியமிக்கப்பட்டதுமே, ஏராளமான தகவல்கள் வந்து குவிகின்றன. குறிப்பாக, அண்ணா பல்கலை மற்றும் கால்நடை மருத்துவ பல்கலை நிர்வாக சீர்கேடுகள் பற்றிய தகவல்களே அதிகம் வந்துள்ளன.

அண்ணா பல்கலை நேரடி கட்டுப்பாட்டின் கீழ், கிண்டி பொறியியல் கல்லுாரி, எம்.ஐ.டி., மற்றும் அழகப்பா தொழில்நுட்ப கல்லுாரிகள் இயங்குகின்றன. தகுதி வாய்ந்த மாணவர்களை ஆண்டுதோறும் பொறியியல் படிப்புக்கு தேர்வு செய்யும் இந்த பல்கலையில், மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்து, 65 சதவீதம் என்ற நிலைக்கு வந்துள்ளது. அதாவது, மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் தேர்ச்சியடையவில்லை. அதற்கு காரணம், பல்கலை நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகள். இதை களைய வேண்டும் என்று கூறி, பல கடிதங்கள் வந்துள்ளன. இதற்கு அடுத்ததாக, கால்நடை மருத்துவ கல்லுாரி நிர்வாக குளறுபடிகள் குறித்த தகவல்கள் வந்துள்ளன. இந்த பல்கலையின் கீழ் இருக்கும் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களாக வேலை பார்க்கும் 52 பேருக்கு, சமீபத்தில் இணை பேராசிரியராக பணி வழங்கப்பட்டது. தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு என்று கூறி, பல்கலை துணைவேந்தர், பதவி உயர்வு வழங்கி உள்ளார். ஆனால், பதவி உயர்வு பெற்றோருக்கு பணி இடம் ஒதுக்குவதில், பல்கலையில் உள்ள முக்கிய அதிகாரி உள்ளிட்ட, மூன்று பேர் புகுந்து விளையாடியுள்ளனர்.

பதவி உயர்வு பெற்றவர்களை அழைத்து பேசிய மூவரும், கேட்கும் இடத்தில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால், தலா, 8 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறி, 3 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளனர். பணம் கொடுத்து, கேட்ட இடத்துக்கு பணி வாய்ப்பு பெற்ற பலர், ஆதாரத்துடன் கவர்னர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.இதுமட்டுமல்ல, பல்கலை மற்றும் அதன் கல்லுாரிகளில் நடக்கும் கட்டட வேலைகள் அனைத் துக்கும், 'இ - -டெண்டர்' தான் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் கூறும் நபர் மட்டுமே டெண்டர் விண்ணப்பம் போட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, முறைகேடு செய்வதாகவும் கடிதம் வாயிலாக புகார் வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அலமாதிக்கு அருகில் கொடுவள்ளியில் இருக்கும் கால்நடை பல்கலைக்கு சொந்தமான, உணவு மற்றும் பால்வள கல்லுாரி வளாகத்தில் செம்மண்ணை சிலர் திருடி சென்றுள்ளனர். அதற்கு, பல்கலை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். இப்படிப்பட்ட பல தகவல்கள், பிரசன்ன ராமசாமிக்கு தொடர்ச்சியாக வருகின்றன. அவற்றை தீவிர விசாரணைக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் --

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.