2022-23-ம் கல்வியாண்டில் ஓசிஎஃப் தொழிற்சாலை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 10, 2022

2022-23-ம் கல்வியாண்டில் ஓசிஎஃப் தொழிற்சாலை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை

வரும் 2022-23-ம் கல்வியாண்டில், ஆவடியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓசிஎஃப் தொழிற்சாலை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு பெற்றோர், ஊழியர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் படைத்துறை, உடைத்துறை தொழிற்சாலை (ஓசிஎஃப்) பள்ளியில் நடப்பு 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு பாதுகாப்புத் துறை இயக்குநர் ஜென்ரல் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதற்கு பெற்றோர், ஊழியர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிற்சாலை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஆவடி, அரவங்காடு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலை பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, வரும் கல்வியாண்டில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்காக காத்திருந்த ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றிய பிறகும் அனைத்து சலுகைகளும் தொடரும் என அளிக்கப்பட்ட உத்தரவாதத்துக்கு எதிராக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க அதிகம் செலவாகும். ஏற்கெனவே, வருமானம் குறைந்துள்ள நிலையில் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புத் தொழிற்சாலை பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.