தலைமையாசிரியரின் ஆசிரியர் விரோதப் போக்கை கண்டித்து துணை ஆணையர் (கல்வி) அவர்களுக்கு புகார் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 2, 2022

தலைமையாசிரியரின் ஆசிரியர் விரோதப் போக்கை கண்டித்து துணை ஆணையர் (கல்வி) அவர்களுக்கு புகார் கடிதம்

சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ,சைதாப்பேட்டை தலைமையாசிரியரின் ஆசிரியர் விரோதப் போக்கை கண்டித்து அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதிப்புமிகு துணை ஆணையர் (கல்வி) அவர்களுக்கு நமது தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHHSSGTA) சார்பில் அளிக்கப்பட்ட புகார் கடிதம்

பெருமதிப்பிற்குரிய, துணை ஆணையர் அவர்களுக்கு,

இனிய வணக்கங்கள்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர் சமுதாயத்தின் பிரச்சனைகளை மிகுந்த உற்சாகத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், உடனுக்குடன் தீர்த்து வைத்து, மாணவச் செல்வங்களின் கல்வித் தரத்தை, உயர்த்துவதற்கு மிகச் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும் தங்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவரும், கீழ்க்காணும் பிரச்சனைகளையும், உடனடியாக தீர்த்துவைக்க தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

1. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் திரு. J.இராஜேந்திரன் என்பவர் தொடர்ந்து ஆசிரியர் விரோதப் போக்கினை மேற்கொண்டு வருகிறார்.

2. இவர், இப்பள்ளியில் பணிபுரியும் தனது ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான ஆணைகள், பணிவரன்முறை ஆணைகள், தேர்வுநிலை ஊதியம் நிர்ணயித்தல், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெற்றுத் தருதல் ஆகியவை எல்லாம் பெற்று தருவது எனது வேலை இல்லை என்றும், ஊதியம் மட்டும் தான் நான் பெற்றுத் தருவேன் என்றும், மற்றவர்கள் தலைமை ஆசிரியர்களாக இருந்தபோது செய்யாமல் விடப்பட்ட வேலைகளை தற்போது என்னால் செய்து தரமுடியாது என்று மிக ஆணவமாக பேசி வருகிறார்.

இப்பள்ளியில் நான் தலைமை ஆசிரியராக இருக்கும்வரை மேற்கூறிய பணிகளை நான் செய்து தரமாட்டேன் என்றும், அவை என்னுடைய வேலையும் அல்ல என்றும் விதிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமாக பேசியும், செயல்பட்டும் வருகிறார்.

3. இத்தலைமை ஆசிரியரின் இத்தகையச் செயல்களால் அப்பள்ளியில் 15 பட்டதாரி ஆசிரியர்களும், 5 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான மன அழுத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள். இதில் பல ஆசிரியர்கள் - பணி ஓய்வு வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பள்ளிக்கு அவர் தலைமையாசிரியராக வந்ததில் இருந்தே இதே தவறான போக்கை கடைபிடித்து வருகிறார்.

4. ஆகவே தாங்கள் இதில் தலையிட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அவ்வாசிரியர்களின் மேற்கூறிய நியாயமானப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்திட தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம். மேலும் அவர், இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக நீடிக்கும் வரை அவ்வாசிரியர்களின் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படாது என்பதால் அத்தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அப்பள்ளி ஆசிரியர்களையும், மாணவச் செல்வங்களையும் காப்பாற்றித் தருமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.