TAPS ஓய்வூதியத்திட்டம் டாப்பா!? ஆப்பா? - முழுமையாகப் படிக்க!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 4, 2026

TAPS ஓய்வூதியத்திட்டம் டாப்பா!? ஆப்பா? - முழுமையாகப் படிக்க!!



TAPS ஓய்வூதியத்திட்டம் டாப்பா!? ஆப்பா!?

Thanks To

_✍🏼 திரு. செல்வ.ரஞ்சித் குமார்_

பதிவை முழுமையாகப் படிக்கும் முன் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுகிறேன். . . .

1. நமது கோரிக்கையை ஏற்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அச்சடித்து வெளியிட்ட வாக்குறுதி, 'பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்' என்பதே.

2. ஓய்வூதியம் என்பது பிச்சையோ, ஊதியத்தில் பிடித்தம் செய்து வழங்கும் எச்சமோ அல்ல; ஓய்வூதியம் என்பது கொடுபடா ஊதியம்.

3. பணிக்கொடைக்கும் (Gratuity) ஓய்வூதியத்திற்கும் தொடர்பில்லை. இரண்டும் வெவ்வேறு தனித்த சட்டங்கள். இந்தியாவில் GPF / EPF / NPS / UPS என ஓய்வூதியத் திட்டங்கள் மாறுபட்டாலும் - மாற்றப்பட்டாலும் அதில் உள்ள பணியாளருக்கு Gratuity உண்டு. தமிழ்நாட்டில் CPSல் உள்ளோருக்கு மட்டும் ஓய்வூதியத்துடன் Gratuityயும் நிறுத்தப்பட்டுவிட்டது.

4. The Payment of Gratuity Act, 1972ன்படி குறைந்தது 10 நபர்கள் பணிபுரியும் நிறுவனம் என்றால், குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியருக்கு ஆண்டிற்கு 15 நாள் ஊதியத்தை பணிக்கொடையாக வழங்க வேண்டும். ---- இப்ப TAPSக்கு வருவோம் ----

Tamil Nadu Assured Pension Scheme எனும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசின் செய்திக்குறிப்பு வெளிவந்து சங்கத்தலைமைகள் அநேகரால் வாழ்த்து மழைகளும், அடிப்படை உறுப்பினர்கள் பெரும்பான்மையினரால் கேள்விகளும் குவிந்து வருகின்றன. தற்போது வெளிவந்துள்ளது அரசாணை அல்ல என்பதால் செய்திக்குறிப்பை மட்டும் முன்வைத்து சில புரிதல்களை நமக்கு நாமே தெளிவுபடுத்திக்கொள்ளவே இப்பதிவு.

செய்திக்குறிப்பில், ஓய்வூதியம் பெறத் தகுதி வாய்ந்த ஆண்டுகள் பணியாற்றிய ஊழியரது 10% பங்களிப்பை வைத்துத்தான் அவருக்கு 50% ஓய்வூதியம் வழங்கப்படும். அதற்கு நிதி போதவில்லையெனில் மீதத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். அப்பணிக்காலத்திற்குக் குறைவானவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். ரூ.25,00,000/- வரை பணிக்கொடை வழங்கப்படும். CPSல் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதாக உள்ளன.

*புரிதல் :*

1. பிடித்தம் செய்யப்படும் 10% CPS தொகை மொத்தமாகத் திரும்பக்கிடைக்காது.

2. 50% ஓய்வூதியம் பெற வேண்டுமெனில் குறைந்தது 30 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

3. 30 ஆண்டுகளுக்குக் கீழ் பணிக்காலம் உள்ளோருக்கு, 50% ஓய்வூதியம் கிடைக்காது. குறைந்தபட்ச ஓய்வூதியம் என்ற ஒன்று வழங்கப்படும்.

4. 30 ஆண்டுகள் பணியாற்றி 50% ஓய்வூதியம் பெறுபவர் இறந்துவிட்டால் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% அதாவது ரூ10,000/- Pension வாங்கியிருப்பின், ரூ.6,000/- Family Pensionஆகக் கிடைக்கும்.

5. Retirement / Death Gratuity (பணிக்கொடை) பணிக்காலத்தைப் பொறுத்து வழங்கப்படும்

6. 30 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரின் Basic Pay + DA ரூ.1,44,445 என்றால் அவருக்கு, உட்சபட்ச பணிக்கொடை ரூ.25,00,000/- கிடைக்கும். மற்றவர்களுக்கு (Working Years × Basic&DA × 15) ÷ 26 என்ற கணக்கீட்டின்படி கிடைக்கும்.

7. TAPS தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு இது நடைமுறைப்படுத்தும் நாள்வரை ஓய்வு பெற உள்ளோருக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

8. 50% ஓய்வூதியம் பெறுவோருக்கு மட்டுமே ஆண்டிற்கு 2 முறை DA கூடும். மற்றபடி 30 ஆண்டுகளுக்குக் கீழ் பணியாற்றுவோருக்கும் DAவிற்கும் தொடர்பில்லை. *கேள்விகள் :*

1. அரசு இனி தனது பங்களிப்பை மாதம்தோறும் ஒதுக்குமா? / ஆண்டிற்கொருமுறை நேரடியாக ஓய்வூதிய நிதியத்தில் செலுத்துமா?

2. 30 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளோருக்கு எத்தனை ஆண்டுகள் அடிப்படையில் எவ்வாறு குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும்?

3. 30 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளோர் இறந்துவிட்டால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுமா?

4. TAPS நடைமுறைக்கு வரும்முன் ஓய்வு பெற்றோருக்கு கருணை ஓய்வூதியம் உண்டு எனில், 01.04.2003ற்குப் பின் பணியேற்று தற்போது வரை ஓய்வுபெற்றுவிட்டோர் உள்ளிட்ட அனைவருக்குமே பொருந்துமா?

5. கருணை ஓய்வூதியம் என்பது எவ்வளவு ரூபாய்?

6. UPS திட்டத்திலும் இதே போன்று ஊழியரின் பங்களிப்பைக் கொண்டே 50% ஓய்வூதியம், 60% குடும்ப ஓய்வூதியம் & குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதிசெய்யப்பட்டுள்ளதே. அப்படியானால், UPSன் மறுவடிவம் தான் TAPSஆ?

7. UPSல் அரசின் பங்களிப்பு 14%. TAPSல் அரசின் பங்களிப்பு என்ன?

8. மாதந்தோறும் / ஆண்டிற்கொருமுறை அரசின் பங்களிப்பு கூடிக்கொண்டே போனால் அரசிற்கு கடும் நிதிச்சுமை நிதியாண்டு தோறும் ஏற்படாதா?

9. மாதந்தோறும் / ஆண்டிற்கொருமுறை 100% ஊழியர்களுக்கும் அரசின் பங்களிப்பினை அளிக்காமல் ஓய்வு பெருவோருக்கு மட்டும் பங்களிப்பு செய்யும் பழைய ஓய்வூதியத் திட்டம் தானே அரசிற்கும் நல்லது?



10. நடப்பு நிதி ஆண்டில் ரூ.11,000 கோடி அரசுப் பங்களிப்போடே கூடுதலாக ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய இயலுமா?



11. ஜனவரி 20ல் தொடங்கும் இந்த ஆட்சியின் இறுதிக் கூட்டத்தொடரில் ரூ.13,000 கோடியை TAPSற்கென கூடுதலாக ஒதுக்கீடு செய்து திருந்திய நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பது சாத்தியமா? ---- சரி TAPS டாப்பா? ஆப்பா? ----

மேற்படி புரிதல் சரியெனில், அதனைத் தொடரும் கேள்விகள் நியாயம்தானெனில் அதற்குண்டான விடைகள் அரசாணையில் கிடைக்கும் என நம்புவோம்.

மேலும், TAPS அறிவிப்பின் வழியே 23 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்ட பணிக்கொடை மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது என்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.

TAPS உங்களுக்கு டாப்பா? ஆப்பா? என்பதை உங்களது ஒட்டுமொத்த பணிக்காலம், பிடித்தம் செய்யப்பட்ட & செய்யப்படவுள்ள CPS தொகை ஆகியவற்றை வைத்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஏனெனில், இதன் பலன்கள் ஒவ்வொரு தனித்த நபரின் சூழல் சார்ந்தவையே.

முடிவு செய்யும் முன்,

LICன் ஜீவன் உட்சவ்வில், 30 - 46 வயதுவரை 16 ஆண்டுகள் மட்டும் மாதம் ரூ.10,375/- செலுத்தினால், 48வது வயது முதல் 100 வயது வரை ஆண்டிற்கு ரூ.2,00,000/- கிடைக்கும்.

LICன் ஜீவன் ஆனந்த்தில், 30 - 60 வயதுவரை மாதம் ரூ.4,800/- வீதம் ரூ.16,90,749/- மட்டும் செலுத்தினால், 60வது வயதில், ரூ.52,60,000/- கிடைக்கும். இதை 8.05% வட்டி வீதத்தில் Fixed Depositல் முதலீடு செய்தால் மாதம் ரூ.36,365/- வீதம் ஆண்டிற்கு ரூ.4,36,385/- வட்டியாகக் கிடைக்கும். இது போக, 100 வயது வரை ரூ.15,00,000/- இலட்சத்திற்கான Long Life Coverageம் கிடைக்கும்.

இதே, தொகையை ஓய்வூதியமாகப் பெற வேண்டுமெனில், 30 ஆண்டுகள் பணிக்காலத்தோடு, இறுதி மாதத்தில் ரூ.72,730/- அடிப்படை ஊதியமாகப் பெற்றிருக்க வேண்டும். இந்த ஊதியத்திற்கு நீங்கள் ஜீவன் ஆனந்த்தைவிட மாதம் ரூ.3,000/- கூடுதலாக TAPSற்கு செலுத்தியிருப்பீர்கள்.

மேலும், CPSலேயே இருந்து Settlement வாங்கி அதை Fixed Depositல் முதலீடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இது ஒரு மாதிரிக் கணக்கீடே. இன்னும் இது போன்ற பல திட்டங்கள் பல்வேறு நிறுவனங்களில் இருக்கலாம். விசாரித்துப் பாருங்கள்.

அதையெல்லாம் விசாரித்துவிட்டு, உங்களது நிதிநிலையை முன்வைத்து உங்களுக்கு TAPS டாப்பா? ஆப்பா? என்ற முடிவிற்கு வாருங்கள்.

இதுவரைக்கும் இந்த ஒப்பீடெல்லாம் செய்தீர்களா? என்றால், நாம் கேட்டதும், நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதியாகக் கொடுத்ததும், தற்போது அறிவித்துள்ள TAPSற்கு முற்றிலும் நேர்மாறான 100% முழுமையான ஓய்வூதியப் பலன்களை உள்ளடக்கிய பழைய ஓய்வூதியத் திட்டத்தைத்தான். அதற்கு இந்த ஒப்பீடெல்லாம் தேவையேயில்லை.

ஆனால், அதுவும் இல்லை, நம்மிடம் பிடிக்கப்பட்ட பங்களிப்புத்தொகையும் இல்லை, 30 ஆண்டுகளுக்குக் குறைவானால் 50% ஓய்வூதியமே இல்லை எனும் போது TAPS முதலீட்டை மற்றவற்றுடன் ஒப்பிட வேண்டிய கட்டாயம் எழத்தானே செய்கிறது.

அதெல்லாம் இல்ல. . . . 'உனது புரிதலே தவறு; கேள்விகள் தேவையற்றவை; ஒப்பீடு அறமற்றது; எதுவுமே இல்லாததற்கு TAPS தேவலாம்!' என்பதே உங்களது பொருளாதாரப் புரிதல் என்றால், உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. இறுதியாக,

பசியில் அழுதுகொண்டிருந்த சிறுவனுக்கு உணவளிப்பதாகக் கூட்டி வந்த தந்தை, அவனிடமிருந்து தான் எடுத்துக்கொண்ட 10 ரூபாயில், 1 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்தாராம். So kind dadல!

அட. . .,

* அந்தக்காசே அவனோடதுதான. . .!?

* அவனோட மீதி 9 ரூபா எங்க. . . .!?

* இதுக்கு அந்தக்காச எடுக்காம இருந்தா, அவன் வயித்துக்கு ஏதோ அவனே வாங்கி சாப்ட்டிருப்பானே. . .!?

* பசியாற உணவுதானே வேணும், அதத்தான தருவேனு சொன்னாரு!?

என்றெல்லாம் உங்களுக்கும் தோன்றினால் நீயும் என் தோழனே

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.