பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதி: திமுகவுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 26, 2025

பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதி: திமுகவுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா?



பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதி: திமுகவுக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா? The old pension scheme promise: Will it affect the DMK in the elections?

பழைய ஓய்வூதியத் திட்டம்: தி.மு.க.வுக்கு எதிரான கேள்விக்கணை!

தி.மு.க. தனது 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் 309-வது வாக்குறுதியாக, 'ஆட்சிக்கு வந்தபின்னர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) அமல்படுத்தப்படும்' என்று அறிவித்தது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது தமிழக எதிர்க்கட்சிகளின் முக்கிய கேள்விக்கணையாக மாறியுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS/CPS) பின்னணி

மத்தியில் அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசால், 2003-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் 2004 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட்டது.

அன்றைய அ.தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தை தமிழகத்தில் உடனடியாகச் செயல்படுத்தியது. ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயமாக்கப்பட்டது. போராட்டக் களங்கள் தகிக்கின்றன

தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக எழுந்த பரவலான எதிர்ப்பால், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிவிட்டன. இதில் சில மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டு, ஆட்சி அமைந்த பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மற்றும் ஜாக்டோ - ஜியோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஜனவரி 6 காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழகத்தில் இப்போது பணியில் இருக்கும் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும், 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்திலும் உள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்கள் (ஜாக்டோ - ஜியோ) ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டம் ஏன் கோரப்படுகிறது?

பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிதி உத்தரவாதத்தை வழங்கியது. இது கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை நிலையான மாத ஓய்வூதியமாக வழங்கியது.

அரசு ஏன் தயங்குகிறது?

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராயக் குழு அமைத்து 9 மாதங்கள் அவகாசம் கொடுத்தது அரசு ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பேச்சுவார்த்தையின்போது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தை தர மறுப்பது ஏமாற்றம் அளிப்பதாகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். நிதிப் பிரச்சினையே தாமதத்திற்குக் காரணம் என அரசு மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. தேர்தலில் எதிரொலிக்குமா?

"பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தாமல், குழுக்களை அமைப்பது துரோகம். உண்மையான பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் திசை திருப்பும் முடிவுகளை அரசு எடுத்தால், அது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும். தமிழக அரசியல் களத்தில் நிலவும் புதிய கூட்டணிக் கணக்குகள், புதுமுகங்களின் வருகை, பா.ஜ.க.வின் பிரசன்ஸ் ஆகியவை அதிகமாக இருக்கும் நிலையில், தி.மு.க. அரசு ரிஸ்க் எடுக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதே தேர்தலில் பின்னடைவைத் தவிர்க்க ஒரே வழி" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.

மாற்று யோசனை

சமூக பொருளாதார ஆர்வலர் ஒருவர், "தமிழக அரசின் நிதி நிலவரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். உடனடியாக அமல்படுத்துவது அரசுக்குப் பாதகமாக அமையும். வேண்டுமானால், அதற்கான உத்தரவாதம் ஒன்றை வழங்கிவிட்டு, அடுத்து ஆட்சி அமையும் பட்சத்தில் படிப்படியாக நிறைவேற்ற முயற்சிக்கலாம். செவிலியர்கள் விவகாரத்தில் பணி நிரந்தர ஆணை வழங்க முடிவெடுத்தது போல், கொள்கை முடிவையாவது முதலில் எடுக்கலாம்" என்று யோசனை கூறுகிறார்.

தேர்தல் காலத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வரிசைகட்டுவதும், எதிர்க்கட்சிகள் அதைக் கையாள்வதும் வழக்கம்தான் என்றாலும், இப்போது நிலவும் புதிய அரசியல் சூழலில், இந்தப் பிரச்சினைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் வேறுவிதமாக இருக்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.