100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு! அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம் - அமைச்சர் அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 19, 2025

100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு! அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம் - அமைச்சர் அறிவிப்பு.



An opportunity for entrepreneurs and companies to set up 100 value-adding centers! A maximum subsidy of one crore 50 lakh rupees - Minister's announcement - 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு! அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம் - அமைச்சர் அறிவிப்பு.

செய்தி வெளியீடு எண்: 2772

: 18.11.2025

செய்தி வெளியீடு

வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு! அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம்! மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிப்பு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றவேண்டும்" என்று அறிவித்துள்ளார்கள். இதில் வேளாண் விளைபொருட்களின் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் இன்றியமையாததாகும். இந்நிலையில், 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் பொருட்டு வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பினைச் செயல்படுத்திட ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், ரூபாய் 10 கோடி வரையிலான மதிப்புக்கூட்டுதல் திட்டங்களுக்கு பொது பிரிவினருக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும். பெண்கள். தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இது தவிர அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் தொழில்கள் வேளாண்மை, தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்கவேண்டும். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள தொகை வங்கிக் கடனாகப் பெறவேண்டும்.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் வேளாண மற்றும் தோட்டக்கலை பயிர்களில் நவீன மற்றும் புதுமையான மதிப்பு கூட்டும் திட்டங்கள். ஏற்றுமதித் திறன் கொண்ட விளைபொருட்கள். விரைவில் வீணாகக்கூடிய காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களில் மதிப்பு கூட்டுதல். மாவட்டத்திற்கே உரிய தனித்துவமான வேளாண் விளைபொருட்களின் மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றில் ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை மாவட்டங்கள் தோறும் தேர்வு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து (Detailed Project Report). வங்கியில் கடன் ஒப்புதல் பெற்றபின், மானியம் அவர்களுடைய விண்ணப்பங்கள் மாவட்ட பெறுவதற்கான தொழில்நுட்பக்குழு மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு அவர்களின் தொழில் திட்டத்திற்கேற்ப மானியத்தொகை அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை ஒரே தவணையாக வழங்கப்படும். மேலும் 5 ஆண்டுகளுக்கு 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுவதுடன் கூடுதலாக வேளாண் கட்டமைப்பு நிதி திட்டத்தில் (Agricutture Infrastructure Fund) 3 சதவீத வட்டி மானியமும் பெறலாம். ஏற்கனவே ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில்களுக்கு நிதி உதவி பெற்ற பயனாளிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இவர்களுக்கு அதிகபட்ச மானியத் தொகையிலிருந்து ஏற்கனவே வேறு ஏதாவது திட்டத்தில் பெற்றுவரும் மானியத்தொகை போக மீதத்தொகை மானியமாக வழங்கப்படும்.

இதுவரை சுமார் 305 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மூலிகைப்பயிர்களில் மதிப்புக்கூட்டுதல், மாம்பழக் கூழ் மற்றும் உறை நிலை மதிப்புக்கூட்டுதல் (Individual Quick Freezing), பலா விதைப் பவுடர், முந்திரி மதிப்பு கூட்டு பொருட்கள், நெல்லிச் சாறு, நெல்லிப் பவுடர். கற்றாழையிலிருந்து அழகு சாதனப் பொருட்கள், தேங்காய் விர்ஜின் ஆயில், முருங்கை இலை கேப்சூல், பிஸ்கட், சிறுதானியங்களில் பாஸ்தா, நூடுல்ஸ், அவல், பிஸ்கட், கானான் ஊறுகாய், பப்பாளி கூழ், ஜாம், சின்ன வெங்காயம் பதப்படுத்தல் போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிக்கும் தொழில் தொடங்கிட 50 பெண் தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட 130 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.

எனவே, வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை செயல்படுத்தி தரமான உற்பத்திப்பொருட்களை உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்து பொருளாதார ஏற்றம்பெற ஆர்வமுள்ள அனைத்து தொழில்முனைவோர்களும் தமிழ்நாடு அரசின் மானிய உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.