Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - ஆரம்பப் பள்ளி கூட்டணி முன் வைத்துள்ள ஆலோசனைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 21, 2025

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - ஆரம்பப் பள்ளி கூட்டணி முன் வைத்துள்ள ஆலோசனைகள்



Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - ஆரம்பப் பள்ளி கூட்டணி முன் வைத்துள்ள ஆலோசனைகள் -

பொருள் ஆசிரியர் தகுதித் தேர்வு உச்சநீதிமன்றத் உள்ள தீர்ப்பின் பொருட்டு பணியில் (In-service Teachers) ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடத்துதல் சார்ந்து 21.11.2025 அன்று ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கருத்துக்கள் சமர்ப்பித்தல்

பார்வை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020353/அ1/2023 நாள்: 20.11.2025

பார்வையில் கண்ட கடிதத்தில் கண்டவாறு ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக 01.09.2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பொருட்டு தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக 21.11.2025 அன்று சென்னையில் பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கீழ்க்கண்ட ஆலோசனைகளைத் தங்களிடம் கனிவுடன் சமர்ப்பிக்கிறோம்.

ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள், அவர்கள் பணிநியமனம் பெற்றபோது நடைமுறையில் இருந்த நியமன விதிகளின்படி முழுத்தகுதியுடன் ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்கள் என்பதால் அவர்கள் பணியில் தொடர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது இயற்கை நீதிக்கு முரணானது என்பதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதலில் தெரிவித்துக்கொள்கிறது. இருப்பினும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப் படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத சூழலில் கீழ்க்கண்டவாறு ஆலோசணைகளைச் சமர்ப்பிக்கிறோம். 1. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி மனு (SLP) எண்:1385/2025 இல் 01.09.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதற்கு தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வழக்கை மூத்த, திறமையான வழக்கறிஞர்களைக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நடத்திடவும், அதன் மூலம் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009 நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்பதை உச்சநீதிமன்றத் திர்ப்பாணையாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

2. பணியில் உள்ள ஆசிரியர்கள் எழுதும் தேர்வு என்பதால் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்ணை 40% ஆக குறைத்திட வேண்டும். ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பீகார், உத்திரப்பிரதேசம், ஹரியானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது. எனவே, பணியில் உள்ள ஆசிரியர்கள் எழுதும் தேர்வு என்பதால் அவர்களது பணி அனுபவம் மற்றும் வயது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களை 40% ஆக குறைத்திட வேண்டுமாய் தமிழ்நாடு அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

3. பணியில் உள்ள ஆசிரியர்கள் எழுதும் தகுதித் தேர்வு என்பதால் ஆசிரியர்களின் பணி அனுபவத்திற்கு ஏற்ப கூடுதல் தகுதி மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வோராண்டு பணி அனுபவமும் கணக்கில் கொள்ளப்பட்டு அதற்கென கூடுதல் தகுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அந்த மதிப்பெண்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன் சேர்த்து கூட்டப்பட்டு மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

4. ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு (Special TET) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் தனித்தேர்வாக நடைபெற வேண்டும். சுயநிதிப் பள்ளிகளில் (Unaided Schools) பணியாற்றும் ஆசிரியர்களை இதில் இணைக்க கூடாது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசை கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

5. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் போது ஆசிரியர் பயிற்சி தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் இருந்தால்தான் விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை மாற்றி, தேர்வு எழுதுபவர்கள் ஏற்கனவே ஆசிரியர்களாக நியமனம் பெற்று பணியில் உள்ளவர்கள் என்பதால் பணியில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

6. கேரள மாநில அரசு விதிவிலக்கு அளித்துள்ளது போல பணியில் உள்ள ஆசிரியர்களில் NET/SET/MPhil/Phd தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கனிவுடன் கேட்டுக்கொள்கிறது. 7. தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்கள் என்பதால் அதையே TET தேர்வுக்கு இணையாகக் கருதி அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களித்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

8. NCTE Notification மற்றும் RTE Act ஆகியவை நடைமுறைக்கு வந்த தேதிக்குப் பின்னர் பணி நியமனம் பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் சிறப்புத் தகுதி தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் இயற்றி அதன் மூலம் பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் பிரிவு 23-ல் திருத்தம் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டு மத்திய அரசை நிர்பந்தம் செய்ய வேண்டுமாய் தமிழ்நாடு அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

9. ஆசிரியர் சிறப்புத் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் பணியில் உள்ள ஆசிரியர்கள் என்பதால் EMIS இணையதளத்தின் வழியாக எளிமையாக விண்ணப்பிக்கும் வகையில் வழிகாட்டுதல்கள் அமைந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

10.சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத இருக்கின்ற அனைத்து வகை ஆசிரியர்களும் பணியில் அனுபவம் பெற்றவர்கள் என்பதால் மாணவர்களின் உளவியலை முழுமையாக அறிந்திருப்பர். எனவே Special TET paper-1 எழுதக்கூடிய ஆசிரியர்களுக்கு அவர்கள் கற்பிக்கும் வகுப்புகளான ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகைப் பாடங்களில் இருந்தும் முழுமையான வினாக்கள் இடம்பெறும் வகையில் உளவியலைத் தவிர்த்து Special TET வினாத்தாள்-1 வேண்டும். அதேபோன்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் Special TET paper-2 எழுதும் ஆசிரியர்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் அவரவர் முதன்மைப் பாடங்களில் இருந்து உளவியலைத் தவிர்த்து வினாத்தாள் அமைய வேண்டும். மேலும், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கற்பித்தல் பணியில் ஈடுபடுவதால் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அவரவரது முதன்மைப் பாடங்களில் இருந்து மட்டும் வினாத்தாள் அமைந்திட வேண்டும். II.Special TET paper-1 மதிப்பெண்களின் பங்கீடு கீழ்க்கண்டவாறு அமைய வேண்டும்.

1. தமிழ் 30 மதிப்பெண்கள்.

2. ஆங்கிலம் 30 மதிப்பெண்கள்

3. கணிதம் 30 மதிப்பெண்கள்

4. அறிவியல் 30 மதிப்பெண்கள்

5. சமூக அறிவியல் 30 மதிப்பெண்கள்.

மேற்கண்ட வினாக்கள் அனைத்தும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகத்தில் இருந்து அமைய வேண்டும்.

அதேபோன்று. Special TET paper-2 மதிப்பெண்களின் பங்கீடு

கீழ்க்கண்டவாறு அமைய வேண்டும்.

1. பொதுவான தமிழ் 30 மதிப்பெண்கள்

2. பொதுவான ஆங்கிலம் 30 மதிப்பெண்கள்.

3. முதன்மை பாடங்கள் 90 மதிப்பெண்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்). TET Paper-2 எழுதும் ஆசிரியர்களுக்கு மொழிப்பாடங்கள் தவிர அவர்களது பாடத்தில் இருந்து மட்டுமே வினாக்கள் அமைய வேண்டும்.

12.தற்போது பணியில் உள்ள மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்விலிருந்து விலக்களித்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட எங்களது ஆலோசனைகளை தங்களுக்கு கனிவுடன் சமர்ப்பிக்கிறோம். தாங்கள் தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களின் நலன் கருதி எங்களது ஆலோசனைகளை ஏற்பு செய்யுமாறு கனிவுடன் தங்களை வேண்டுகிறோம்.

CLICK HERE TO DOWNLOAD ஆரம்பப் பள்ளி கூட்டணி முன் வைத்துள்ள ஆலோசனைகள் PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - ஆரம்பப் பள்ளி கூட்டணி முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.