தீவிரமடையும் SIR பணிகள்! வீடு பூட்டியிருந்தால் என்னவாகும்? - முழு விவரம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 9, 2025

தீவிரமடையும் SIR பணிகள்! வீடு பூட்டியிருந்தால் என்னவாகும்? - முழு விவரம்!



தீவிரமடையும் SIR பணிகள்! வீடு பூட்டியிருந்தால் என்னவாகும்? - முழு விவரம்! - SIR work intensifies! What happens if the house is locked? - Full details!

தமிழ்நாடு முழுவதும் 20 ஆண்டுகளுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரிபார்க்கும் சிறப்பு தீவிர திருத்த பணி (Special Intensive Revision - SIR) கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, வீடு பூட்டியிருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இது குறித்த சந்தேகங்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

மூன்று முறை தேடி வரும் அலுவலர்கள்

வாக்குச்சாவடி நிலை அலுவலர் உங்கள் வீட்டிற்கு வரும்போது, வீடு பூட்டியிருந்தால், அவர் உடனடியாக உங்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்கிவிட மாட்டார். மாறாக, ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று முறை வருவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அலுவலர்கள் வரும் தேதிகள், முன்கூட்டியே அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு அறிவிக்கப்படும். என்னென்ன சவால்கள் உள்ளன?

சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், பகல் நேரங்களில் பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இதனால், அலுவலர்களால் உரியவர்களிடம் படிவங்களை கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாடகை வீடுகளில் குடியிருப்போர் அடிக்கடி வீடு மாறுவதால், அவர்களின் தற்போதைய முகவரியை கண்டறிவதும் சவாலாக உள்ளது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

வாக்குச்சாவடி நிலை அலுவலர் வரும்போது, அவரிடம் இருந்து முன்பே ஓரளவு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த படிவத்தில் உங்கள் பெயர், வயது, முகவரி, புகைப்படம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து, உங்கள் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு அலுவலரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

ஒருவேளை, அலுவலர் வரும்போது நீங்கள் வீட்டில் இல்லை என்றாலோ அல்லது அவரை சந்திக்க முடியவில்லை என்றாலோ, voters.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், நீங்களே உங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

நீங்கள் அதே தொகுதிக்குள் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தால், அந்த தகவலை அலுவலரிடம் தெரிவிக்கலாம். வேறு தொகுதிக்கு மாறியிருந்தால், பழைய தொகுதியில் உங்கள் பெயரை நீக்கிவிட்டு, புதிய தொகுதியில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். காலக்கெடுவை தவறவிடாதீர்கள்

டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் இந்த வீடு வீடாக சரிபார்க்கும் பணியின் போது, உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம். ஒருவேளை, இந்த படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து கொடுக்கத் தவறினால், டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாமல் போக வாய்ப்புள்ளது. அதன் பிறகு, நீங்கள் மீண்டும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, உங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை சரியாக நிறைவேற்ற, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.