முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம்: நவ.6-ம் தேதி முதல் மாநிலக் கலந்தாய்வு All India Counselling for Postgraduate Medical Courses Begins Online: State Counselling to Begin from Nov. 6 -
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. நாடுமுழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள்நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடுமுழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள், நீட் தேர்வை கடந்த ஆக.3-ம் தேதி எழுதினர். தேர்வு முடிவுகள் ஆக.19-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், எம்டி எம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. அதன்படி, https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் நவ.5-ம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணி வரை கட்டணம் செலுத்தலாம். அக்.28-ம் தேதி முதல் நவ.5-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களைத் தேர்வு செய்யலாம். நவ.6, 7-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 8-ம்தேதி அதன் விவரம் வெளியிடப்படும். மேலும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். 16-ம் தேதி முதல்18-ம் தேதிக்குள் மாணவர்களின் விவ ரங்களை கல்வி நிறுவனங்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வு நவ.19-ம் தேதியும், 3-ம் சுற்றுக் கலந்தாய்வு டிச.8-ம் தேதியும், இறுதியாக காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிச.30-ம் தேதியும் தொடங்கவுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக,மீதமுள்ள 50 சதவீத அரசு இடங்கள், தனியார் கல்லூரிகளின் மாநில அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. எம்டி,எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான மாநில கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது நவ.6-ல் தொடங்குகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.