கூடுதலாக 10,650 எம்.பி.பி.எஸ்., 'சீட்'; மருத்துவ கமிஷன் ஒப்புதல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 21, 2025

கூடுதலாக 10,650 எம்.பி.பி.எஸ்., 'சீட்'; மருத்துவ கமிஷன் ஒப்புதல்



கூடுதலாக 10,650 எம்.பி.பி.எஸ்., 'சீட்'; மருத்துவ கமிஷன் ஒப்புதல் Additional 10,650 MBBS, 'CEED'; Medical Commission approves

நாடு முழுதும், 41 மருத்துவக் கல்லுாரிகளுக்கும், 10,650 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளுக்கும் தேசிய மருத்துவ கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2024ல் நடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவ கல்வியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக 75,000 இடங்கள் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

விண்ணப்பம்

இதையடுத்து, நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள இடங்களை படிப்படியாக உயர்த்த தேசிய மருத்துவ கமிஷன் ஒப்புதல் அளித்து வருகிறது. அந்த வகையில் புதிதாக, 10,650 எம்.பி.பி.எஸ்., சீட்களுக்கு தேசிய மருத்துவ கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் அபிஜத் ஷேக் கூறியதாவது:

மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் அதில் உள்ள இடங்கள் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிதாக 41 மருத்துவக் கல்லுாரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை 816 ஆக உயர்ந்துள்ளது. இளங்கலை மருத்துவ படிப்பை உயர்த்த, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளிடம் இருந்து 170 விண்ணப்பங்கள் வந்தன.

இதையடுத்து, 10,650 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை 1,37,600 ஆக அதிகரித்துள்ளது. முதுகலை மருத்துவ படிப்பில் உள்ள இடங்களை உயர்த்த, 3,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதைத் தொடர்ந்து, முதுகலை படிப்பில், 5,000 இடங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதன் வாயிலாக, முதுகலை மருத்துவ படிப்பில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 67,000 ஆக உயரும். அட்டவணை

இறுதி ஒப்புதல் செயல்முறை மற்றும் கவுன்சிலிங் சில தாமதங்களை சந்தித்தாலும், இந்த நடைமுறைகள் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும். வரும் கல்வியாண்டிற்கான அங்கீகாரம், தேர்வுகள் குறித்த அட்டவணையை விவரிக்கும் வரைபடம் விரைவில் வெளியிடப்படும்.

கூடுதலாக, 2025 - 26ம் ஆண்டின் விண்ணப்பங்களுக்கான இணையதளம் அடுத்த மாதம் திறக்கப்படும். மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியாக, மருத்துவ ஆராய்ச்சியை பிரதான மருத்துவ பாடத்திட்டத்தில் ஒருங்கிணைப்பது குறித்து தேசிய மருத்துவ கமிஷன் ஆராய்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.