உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆசிரியர்கள் பதற்றம் ! பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய சிபிஐ ( எம் ) வலியுறுத்தல் !! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 2, 2025

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆசிரியர்கள் பதற்றம் ! பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய சிபிஐ ( எம் ) வலியுறுத்தல் !!



உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆசிரியர்கள் பதற்றம் ! பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய சிபிஐ ( எம் ) வலியுறுத்தல் !!

அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும் , பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் ( டெட் ) தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனவும் , கட்டாயக் கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கட்டாயம் ' டெட் ' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் . இதில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் . அவர்களை ஓய்வு பெற்றவர்களாக கருதி ஓய்வூதிய பலன் வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மிகக் கடுமையான முறையில் தீர்ப்பளித்துள்ளது.

இதில் 55 வயதைத் தாண்டிய ஆசிரியர்களுக்கு மட்டும் டெட் தேர்விலிருந்து விலக்கு அளித்துள்ளது . இவர்களைத் தவிர மற்ற அனைத்து ஆசிரியர்களையும் இத்தீர்ப்பு நிலைகுலைய செய்துள்ளது . மேலும் , தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் பதவி உயர்வுக்கும் , தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு அதாவது அதற்கு 20 , 25 ஆண்டுகளுக்கு முன்பே ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் கூட தற்போது தங்கள் பணியைத் தொடர தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறுவது இயற்கை நீதிக்கு மாறாக உள்ளது . உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலமாக பணிப் பாதுகாப்பற்ற சூழல் இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சட்டம் அல்லது அரசாணை அது நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து தான் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஆண்டுகள் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்துவது என்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பல எனவே , உச்ச நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக உடனடியாக தமிழ்நாடு அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனடியாக அடுத்த கட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றும் , மேலும் , ஒரு வேளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கூட தமிழ்நாடு அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தனியாக சிறப்புத் தகுதித் தேர்வு ( special TET ) நடத்திட வேண்டுமென்றும் , அத்தேர்வில் பணியில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்பதற்குரிய வாய்ப்புகளை கூடுதலாக ஏற்படுத்தித் தரவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.