பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர்கள் விடிய விடிய போராட்டம் - தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேர் பங்கேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 12, 2025

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர்கள் விடிய விடிய போராட்டம் - தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேர் பங்கேற்பு



Government employees protest day and night demanding old pension scheme - 1 lakh people participate across Tamil Nadu - பழைய ஓய்வூதிய திட்டம் கோரி அரசு ஊழியர்கள் விடிய விடிய போராட்டம் - தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேர் பங்கேற்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்களின் தர்ணா போராட்டம் விடிய, விடிய நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான ஆணையம் 2016-ல் அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அந்த ஆணையம் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் இதுவரை பொதுவெளியில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இதையொட்டி அதிமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்ட திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஓராண்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றித் தருவோம் என்று கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாகிய நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதது அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை தமிழக அரசு தற்போது அமைத்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. இதில் அரசு ஊழியர் சங்கத்துடன் 64 துறை சங்கங்களும் இணைந்து பங்கேற்றன. தமிழகம் முழுவதும் நேற்று காலை 10 மணி வரை நடந்த போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்ட்டோர் பங்கேற்றதாக சங்கத்தினர் தெரிவித்தனர். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். இரவிலும் தொடர்ந்த போராட்டத்தில் அங்கே உறங்கிய ஊழியர்கள், காலையில் மீண்டும் எழுந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை தொடர்ந்தனர். இவ்வாறு விடிய விடிய நடந்த போராட்டத்தை காலை 10 மணிக்கு முடித்துக் கொண்டு ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காத பட்சத்தில் அடுத்தக்கட்டமாக வரும் 14-ம் தேதி தாலுகா அளவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இதுதவிர, வரும் 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மார்ச் 19-ம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகையை போராட்டங்களுக்கு பிறகும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாகவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.