நியமன தேர்வு - போராட்டத்தில் 3 ஆசிரியைகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 5, 2025

நியமன தேர்வு - போராட்டத்தில் 3 ஆசிரியைகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!



Appointment exam - 3 teachers faint during protest, creating a stir...! நியமன தேர்வு - போராட்டத்தில் 3 ஆசிரியைகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!

நியமன தேர்வு எழுதி ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் கலந்தாய்வு மற்றும் பணி நியமனம் வழங்காததை கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் இன்று(04-02-2025) திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினார்கள்.

இதில், திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் நாகூர் மீரா மற்றும் பிரபாகர் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த 2023-2024ம் ஆண்டிற்கான தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டு 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி தேர்வு நடத்தியது.

அதனைத் தொடர்ந்து மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் நாங்கள் தேர்ச்சி பெற்றோம். அதன்பின், ஜூன் மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்து கொண்டோம். ஜூலை மாதம் வெளியிட்ட உத்தேச தேர்வுப்பட்டியலிலும் நாங்கள் இடம்பெற்றோம். தற்போது உத்தேச தேர்வுப்பட்டியல் வெளியிட்டு 7 மாதங்களுக்கு மேலாகியும் எங்களுக்கு இதுநாள் வரை கலந்தாய்வு நடைபெறவில்லை. ஆனால், எங்களுடன் தேர்ச்சி பெற்று ஆதிதிராவிடப் பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் பலநாட்களுக்கு முன்பே பணியில் சேர்ந்து விட்டனர்.

மேலும் பட்டதாரி ஆசிரியர்களை நிரப்புவதற்கான இத்தேர்வு 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றதால் தனியார் பள்ளியில் வேலை பார்த்த நாங்கள் வேலையினை துறந்து விட்டு படித்தோம். மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் அதிகமானோர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

அவர்களின் பணிக்காலமும் மிகவும் குறைவு. தற்போது ஆண்டு பொதுத் தேர்வுக்காலம் என்பதால் தனியார் பள்ளிகளிலும் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளது.

எனவே எங்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதி எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான கலந்தாய்வினை உடனே நடத்தி 3192 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆசிரியைகள் வெயிலின் காரணமாக திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களை சக ஆசிரியைகள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.