நன்னெறி கல்விப் பாடத்திட்டம் - கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி செயல்படுத்திட அறிவுரை வழங்குதல் - சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
நன்னெறிக் கல்வி உலகப்பொதுமறை திருக்குறள் மாணவர்களின் பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை வலுவூட்டல் நன்னெறி கல்விப் பாடத்திட்டம் - கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி செயல்படுத்திட அறிவுரை வழங்குதல் - சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தமிழகம் உலகிற்கு தந்த பெருங்கொடையாகவும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுமறையாகவும் உள்ள திருக்குறள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடநூலில் இன்றியமையாத இடத்தினைப் பெற்று செவ்வனே கற்பிக்கப்படுகிறது . மேலும் பார்வை ( 1 ) இல் கண்டுள்ள அரசாணையின்படி திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாவில் உள்ள 105 அதிகாரங்களை உள்ளடக்கி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நன்னெறிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . அறிவுக்கருவூலமான திருக்குறளை வாழ்வியல் நெறியாக மாணவர் பின்பற்றும் பொருட்டு பள்ளிகளில் தகைசால் தனிச்சிறப்புடன் நன்னெறிக்கல்வியினை புகட்டுவதற்கும் கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது . பள்ளிக் கல்வித் துறை - திருக்குறளில் உள்ள நுாற்றி ஐந்து அதிகாரங்களை ஆறாம வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான நன்னெறிக் கல்விப் பாடத்திட்டத்தின் வழியாகப் பயிற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 51
பள்ளிக் கல்வித் (ERT) துறை
நாள்: 21.03.2017
திருவள்ளவர் ஆண்டு - 2048 துன்முகி வருடம், பங்குனி - 8
படிக்கப்பட்டவை:
1. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண்.11999/2015, தீர்ப்பாணை நாள் 26.04.2016.
2. பள்ளிக் கல்வி இயக்குநர் கடித ந.க.எண்.054478/திவ2/இ2/2016 நாள் 09.05.2016 மற்றும் 23.02.2017.
3. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் கடித ந.க.எண்.616/ஈ2/2015, நாள் 16.02.2017 ஆணை:-
உலக இலக்கியச் செழுமைக்கு தமிழ்மொழியின் மிகச் சிறந்த கொடையாகக் கருதப்படுவதும், நன்னெறிக் கருத்துக்களுடன் வாழ்வியல் நெறிகளையும் இணைத்து செதுக்கப்பட்ட அறிவுக் கருவூலமாம் "திருக்குறள்" ஏற்கெனவே தமிழ் மொழிப்பாடத்தில் தேவைக்கேற்ப முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உரிய அளவில் கற்பிக்கப்படுகிறது.
2. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திரு.இராஜரத்தினம் என்பவரால் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் எனத் தொடரப்பட்ட பொது நல வழக்கு எண்.11999/2015ல் மாண்பமை உயர்நீதிமன்றம் தனது 26.04.2016-ம் நாளிட்ட தீர்ப்பில், கல்வியின் முதன்மைக் குறிக்கோளே நன்னெறிக் கருத்துக்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் சமூகம் என்பதால் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்த்திட உரிய நடவடிக்கை எடுத்திட அரசுக்கு ஆணையிட்டது.
3. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த ஆணையினை நடைமுறைப்படுத்திடும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திட பள்ளிக் கல்வி இயக்குநரும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும் அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டனர். papaan 4. மேலே இரண்டு மற்றும் மூன்றில் படிக்கப்பட்ட கடிதங்களில் திருக்குறளில் உள்ள நுாற்றி எட்டு அதிகாரங்களையும், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது ஆய்வின் அடிப்படையில் இன்பத்துப்பாலிலுள்ள இருபத்து ஐந்து அதிகாரங்கள் நீங்கலாக, அறம் மற்றும் பொருட்பாலிலுள்ள நுாற்றி எட்டு அதிகாரங்களிலுள்ள அனைத்துத் திருக்குறள்களையும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வயது மற்றும் வகுப்பைக் கணக்கீடு செய்து அதற்கேற்றவாறு நன்னெறிக் கல்விக்கான திருக்குறள் பாடத்திட்டத்தினை வகுத்துள்ளது என்றும், அவ்வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நன்னெறிக் கல்விக்கான திருக்குறள் பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
5. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவானது அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டதில், வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 'நன்னெறிக் கல்விப் பாடத்திட்டத்தில்' மாணவப் பருவத்தில் கற்பிக்க வேண்டிய திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் அறம் மற்றும் பொருட்பாலில் உள்ள நுாற்றி ஐந்து அதிகாரங்களை (இணைப்பில் கண்டுள்ளவாறு) வகுப்பு வாரியாக பதினைந்து அதிகாரங்கள் என்ற முறையில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் வரும் கல்வியாண்டிலிருந்து (2017-18) பயிற்றுவிக்க அரசு ஆணையிடுகிறது.
6. உலகப் பொதுமுறையாம் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துக்களின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக் கதைகள், அசைவூட்டப் படங்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களைச் சென்றடையும் விதமாக இணையவழி திருக்குறள் வளங்களை அவ்வப்போது நவீனமுறையில் உருவாக்கி, உடனுக்குடன் பதிப்பித்து வெளியிட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும் தமிழ்நாட்டுப் பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநரும் பணிக்கப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THIRUKURAL CIRCULAR WITH GO REG PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.