அரசின் சமரச பேச்சில் அதிருப்தி: ஆசிரியர்கள் நாளை ஸ்டிரைக் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 9, 2024

அரசின் சமரச பேச்சில் அதிருப்தி: ஆசிரியர்கள் நாளை ஸ்டிரைக்



அரசின் சமரச பேச்சில் அதிருப்தி: ஆசிரியர்கள் நாளை ஸ்டிரைக்

பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்படாததால், நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக, 'டிட்டோ ஜாக்' அறிவித்துள்ளது. 'டிட்டோ ஜாக்' என்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

இதையடுத்து, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், சங்க நிர்வாகிகளுடன், கடந்த 6ம் தேதி பேச்சு நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதாக அரசு அறிவித்தது.

இந்நிலையில், டிட்டோ ஜாக் மாநில உயர்மட்ட குழு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. கூட்டத்தில் மீண்டும் போராட்டம் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, அமைப்பின் நிர்வாகி தியோடர் ராபின்சன் கூறியதாவது: துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் இடமாறுதல் வழங்கிய நிலை மாறி, மாநிலத்தில் எந்த பகுதிக்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதனால், குடும்பத்தை விட்டு வெகுதுாரம் செல்ல வேண்டி உள்ளது. பதவி உயர்விலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறையை கைவிட வேண்டும்.

அடுத்ததாக, சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினோம். அதற்கு தீர்வு காணப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. அதனால், திட்டமிட்டபடி நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். வரும் 29, 30, அக்., 1ல், கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.