மேலும் ஒரு BEO சஸ்பெண்ட் - அரசு பள்ளிகளில் அடுத்தடுத்து சிக்கல் - அதிர்ச்சியில் அதிகாரிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 21, 2024

மேலும் ஒரு BEO சஸ்பெண்ட் - அரசு பள்ளிகளில் அடுத்தடுத்து சிக்கல் - அதிர்ச்சியில் அதிகாரிகள்



மேலும் ஒரு BEO சஸ்பெண்ட் - அரசு பள்ளிகளில் அடுத்தடுத்து சிக்கல் - அதிர்ச்சியில் அதிகாரிகள்

பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். வட மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆனால் ஆசிரியர்கள் சிலர் தங்களின் சுயநலத்திற்காக குறைவாக மாணவர்கள் இருந்தாலும், அவர்களின் எண்ணிக்கைய அதிகமாக காண்பிக்கும் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் உண்மையில் ஆசிரியர்கள் தேவையுள்ள மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படுவதுடன், அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதால் செலவும் அதிகரிக்கிறது.

பள்ளிக்கல்வித் துறையில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவேடு தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வின்போது மாணவர்கள் இல்லாத பள்ளிகளிலும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை ஆய்வு அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலர் மற்றும்பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டார்.

இதேபோல் கடந்த மாதத்தில் மட்டும் 17,810 தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஆய்வுகள் நடைபெற்று உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைவிட கூடுதலாக ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கி நியமனம் செய்த கோலியனூர் வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.