நாம் போராட்ட அறிவிப்புகளை அடிக்கடி வாபஸ் பெற்றுக் கொள்வது போல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் அவர்கள் அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை திரும்ப பெற்றுவிட்டாரோ??? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 23, 2024

நாம் போராட்ட அறிவிப்புகளை அடிக்கடி வாபஸ் பெற்றுக் கொள்வது போல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் அவர்கள் அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை திரும்ப பெற்றுவிட்டாரோ???



As we often withdraw our protest announcements, Hon'ble Tamil Nadu Chief Minister has also withdrawn his election promises??? நாம் போராட்ட அறிவிப்புகளை அடிக்கடி வாபஸ் பெற்றுக் கொள்வது போல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் அவர்கள் அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை திரும்ப பெற்றுவிட்டாரோ???

நாம் போராட்ட அறிவிப்புகளை அடிக்கடி வாபஸ் பெற்றுக் கொள்வது போல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் அவர்கள் அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை திரும்ப பெற்றுவிட்டாரோ என்ற ஐயம் எழுகிறது.

AIFETO.

நாள்: 22.02.2024.

தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 19 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கையினை தாக்கல் செய்கிற போது பேரறிஞர் அண்ணா சொன்னது போல இந்த நிதிநிலை அறிக்கையில் எங்கள் இதயம் இருக்கிறது என்று தெரிவித்தார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி முன்னேறும் பட்ஜெட் என்று பெருமிதத்துடன் அறிவித்து தாக்கல் செய்தார்கள். 126 நிமிடங்கள் அழகான தமிழில் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைமையில் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து படித்தார். தமிழ்நாட்டில் நாளேடுகள் வித்தியாசம் இன்றி சபாஷ் பட்ஜெட், நம்பிக்கை தரும் பட்ஜெட் என்றெல்லாம் தலைப்பு கொடுத்து தலையங்கத்தினை தீட்டி உள்ளார்கள்.

மாண்புமிகு நிதியமைச்சர் முதன்முதலாக தயாரித்த சாதுர்யமான பட்ஜெட் என்றார்கள். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கைகளை தயாரிப்பதற்கு துணையாக இருந்து பாடுபட்டுள்ள அலுவலர்கள், பணியாளர்கள் இந்த நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் என்று சுமார் 12 லட்சம் பேரை பற்றி அவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக இரண்டு மணி ஆறு நிமிடம் படித்த இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு மூன்று நிமிடமாவது இடம் பெற்றிருக்கலாமே..? ஆனால் எதுவும் இடம்பெறவில்லை.

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் மனித நேயம் கொண்டவர் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் இதய பற்றாளர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு மதிப்புமிகு நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் தலைமையில் தயாரிக்கும் அறிக்கை தானே வெளியிடப்படுகிறது. வரவேற்பதற்கு ஒன்றுமே இல்லையா? மாணவர்களின் கல்வி நலன் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு 44ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் ( 6 முதல் 12 ஆம் வகுப்பு ) வரை படிக்கின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூபாய் 1000/-வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம்வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். அதேபோல் அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு "தமிழ்ப்புதல்வன் " திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் மூன்று லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. கல்விக் கடன் வழங்குவதற்கு ஒரு லட்சம் மாணவர்களுக்கு 2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டுதல் போன்ற அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டுள்ளன. மேற்காணும் அறிவிப்புகளை எல்லாம் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் முற்றிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதையும் செய்து பயனில்லை காரணம் இவர்களுடைய வாக்கு வங்கி நமக்கு ஒரு நாளும் பயன்படாது என்று திட்டமிட்டு செயல்பட்டார்கள். மக்கள் வாக்கு வங்கி எங்களிடம் உள்ளது நீங்கள் தேவை இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார்கள். ஆனால் நமது அரசு, எங்கள் அரசு என்று ஆட்சியில் அமரும்போது பெருமையுடன் கொண்டாடி மகிழ்ந்தோம். ஆனால் அவர்கள் இன்று எங்களுக்கு மக்களின் வாக்கு வங்கி உள்ளது. கூட்டணி கட்சியின் வாக்கு வாங்கி உள்ளது. நீங்கள் தேவையே இல்லை என்று நிதிநிலை அறிக்கையில் முற்றிலும் புறக்கணித்து விட்டார்கள்.

இன்று வந்த முரசொலி நாளேட்டில் என்ன இல்லை இந்த நிதிநிலை அறிக்கையில்? எந்த துறை இல்லை? இதில் எந்த தரப்பு தான் இல்லை? இதில் அனைவருக்குமான நிதி நிலை அறிக்கை அல்லவா? என்று தலையங்கத்தினை கண்டு நம்மையும் அறியாமல் படித்து நொந்து போகிறோம். நீங்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஓய்வூதியர்கள் என 18 லட்சம் பேர் வாக்குகள் குடும்ப வாக்குகள் என சுமார் ஒன்றரை கோடி வாக்குகள் தேவை இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர்களின் முடிவுகளை அவரவர்கள் எடுத்துக் கொள்வார்கள். பிப்ரவரி 14ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்தபோது மலர்ந்த முகத்துடன் சிரித்தாரே நம்மவர்களும் வாய்விட்டு சிரித்தார்களே அந்த புகைப்படத்தை பார்த்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை பிறந்தது. அந்த சிரிப்புக்கு பொருள் நம்மை பார்த்து அனுதாப சிரிப்பா..? என்று எண்ண தான் தோன்றுகிறது.

பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு நான்காவது நாளாக போராடும் பதிவு மூப்பு ஆசிரியர்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும், சரண் விடுப்பு அனுமதி தொடரும், பேரறிஞர் அண்ணா அறிவித்து சென்ற ஊக்க ஊதிய உயர்வு மீண்டும் அமல்படுத்தப்படும், 90 விழுக்காடு பெண் ஆசிரியர்களுக்கு பாதிப்பாக வெளிவந்துள்ள அரசான 243 உடனடியாக திரும்பப் பெறப்படும் என்றெல்லாம் அறிவிப்பு வரும் என்று விடியல் அரசை நோக்கி விடியும் வரை காத்திருந்தோமே..?

தேர்தல் கால வாக்குறுதிகளை முற்றிலும் திரும்பப் பெற்று விட்டீர்களா..? உங்கள் மனசாட்சியே எங்களுக்கு பதில் சொல்லட்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி பாதுகாப்பு அளித்து வந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் நினைவிடத்தில் இருந்து எங்கள் உணர்வுகளை சமர்ப்பணம் செய்கிறோம். சங்கங்கள் போராடாமல் சங்கங்களின் வரலாற்றில் எந்த கோரிக்கையினையும் வெற்றிக் கண்டதாக சரித்திரமும் இல்லை..! வரலாற்றுப் பதிவுகளும் இல்லை..! 15ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தினை தீவிரமாக நடத்தி இருந்தால் அந்த எதிர்ப்பு உணர்வு இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..! ஐயமும் இல்லை..! நம்பிக்கைத் தளராமல் நாடாளுமன்றத் தேர்தல் வரை காத்திருப்போம்...!

இழந்ததை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உணர்வுடன்,

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி , ஆர்வலர் மாளிகை 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005, அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.