அரசுக்கு எதிராக அதிகரிக்கும் போராட்டம் கண்காணிப்பு வளையத்தில் சங்க நிர்வாகிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 23, 2023

அரசுக்கு எதிராக அதிகரிக்கும் போராட்டம் கண்காணிப்பு வளையத்தில் சங்க நிர்வாகிகள்



மீண்டும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் - கண்காணிப்பு வளையத்தில் சங்க நிர்வாகிகள்

போராட்ட களத்தில் இருந்து ஒதுங்கியிருந்த, 'ஜாக்டோ ஜியோ' அமைப்பு, மீண்டும் போராட்டம் அறிவித்துள்ளதால், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கண்காணிக்கும் பணியை அரசு துவக்கியுள்ளது.

தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில், 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்காக, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். முந்தைய, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டங்களுக்கு, தி.மு.க., ஆதரவு அளித்தது. இந்த அமைப்பின் கோரிக்கைகளை, வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையிலும் தி.மு.க., இணைத்தது.

ஆனாலும், தி.மு.க., ஆட்சி அமைந்த பின், எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மீண்டும் போராட்டங்களை கையில் எடுத்தது. ஆனால், அவ்வப்போது பேச்சு நடத்தி, போராட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டன.

இதனால், அதிருப்தி அடைந்த சில ஆசிரியர் சங்கங்கள், தனித்தனியே போராட்டங்களை துவக்கின. பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சி.பி.எஸ்., என்ற பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கம் என, பல சங்கங்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கின.

சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, சென்னையை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த நடவடிக்கையை பார்த்த, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு, மீண்டும் போராட்டத்தை அறிவித்து உள்ளது.

நவம்பர், 1ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்; நவ., 15 முதல் 24 வரை, மாநிலம் முழுதும் பிரசார இயக்கம்; நவ., 25ல் மாவட்ட தலைநகரில் மறியல்; டிச., 28ல் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளது.

இதனால், அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜாக்டோ ஜியோவில் உள்ள தி.மு.க., ஆதரவு நிர்வாகிகளின் உதவியுடன், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை போலீசார் கண்காணிக்க துவங்கி உள்ளனர்.


ஒரு சில சங்க நிர்வாகிகள் மட்டும் தொடர்ந்து போராட காரணம் என்ன; சங்க நிர்வாகிகளுக்கு உள் நோக்கம் உள்ளதா; அரசியல் ரீதியாக வேறு ஏதாவது காரணங்கள் மற்றும் பின்னணி உள்ளதா என்ற, தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக, ஆசிரியர் சங்க வட்டாரங்கள் குழப்பம் அடைந்துஉள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.