ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது ஜாக்டோ - ஜியோ அமைப்பு அதிருப்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 29, 2023

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது ஜாக்டோ - ஜியோ அமைப்பு அதிருப்தி



ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது ஜாக்டோ - ஜியோ அமைப்பு அதிருப்தி Jacto-Jio Organization Discontent With Teachers' Union Executives

கூட்டமைப்பை கலந்தாலோசிக்காமல், சில ஆசிரியர் சங்கங்கள் மட்டும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்ததால், ஜாக்டோ ஜியோவில் அதிருப்தி உருவாகியுள்ளது.மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும், 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, இம்மாதம், 25ம் தேதி அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி மூன்று நாட்களுக்கு பின், சில ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த புகைப்படமும், அரசின் சார்பில் வெளியானது. இதையடுத்து, ஜாக்டோ - ஜியோவில் அங்கம் வகிக்கும் பல சங்கங்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய முரண்பாடுகளை களைவது, ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்தால் ஊதியம் வழங்குவது போன்றவை குறித்து, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்காகவே, தொடர்ச்சியாக போராட்டங்களை அறிவித்து வருகிறோம்.போராட்டங்களையும், சங்க நடவடிக்கைகளையும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில், கூட்டமைப்பில் ஆலோசிக்காமல், சில சங்கங்களின் நிர்வாகிகள் மட்டும், அரசின் ஏற்பாட்டில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆனால், நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து, முதல்வர் தலைமையில் பேச்சு நடத்த, 2 ஆண்டுகளாக முயற்சிக்கிறோம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இரட்டை நிலைப்பாடு கொண்ட சங்கங்களை, முழுமையாக புறக்கணித்து விட்டு, ஜாக்டோ - ஜியோ செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான களையெடுப்பு நடவடிக்கை விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.