உயர் கல்வி, வேலைவாய்ப்புக்காக கனடா செல்வதை தவிர்க்கும் இந்திய மாணவர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 23, 2023

உயர் கல்வி, வேலைவாய்ப்புக்காக கனடா செல்வதை தவிர்க்கும் இந்திய மாணவர்கள்

உயர் கல்வி, வேலைவாய்ப்புக்காக கனடா செல்வதை தவிர்க்கும் இந்திய மாணவர்கள் - Indian students avoid going to Canada for higher education, employment


உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக இந்திய மாணவர்கள், இளைஞர்கள் கனடா நாட்டை தவிர்க்க தொடங்கியுள்ளனர்.

காலிஸ்தான் தீவிரவாதி நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மீது, கனடா நேரடியாக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதற்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்தால் இருநாட்டு உறவு கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கனடாவுக்கு உயர்கல்வி பயில வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அங்கு கல்வி பயிலும் இந்திய மாணவர்கள், வேலை பார்க்கும் இந்திய இளைஞர்கள் மீது வெறுப்பு உணர்வு ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே அங்குள்ள மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மீது இனரீதியான தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதுபோன்ற நிலை கனடாவிலும் ஏற்படலாம் என்றும், மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனடாவுக்கு உயர்கல்விப் பயிலச் செல்லும் இந்திய இளைஞர்கள் வேறு நாடுகளைத் தேடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அவர்கள் கனடாவை தவிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கனடாவின் டொரண்டோ நகரிலுள்ள செனக்கா கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர் அகான்ஷா வோரா கூறும்போது, “இங்கு பயிலும் இந்திய மாணவர்கள் சிலர், வேறு நாடுகளுக்குச் சென்று பயிலும் அறிவுரை வந்துள்ளது. எனவே, பலர் வேறுநாடுகளைத் தேடி வருகின்றனர். என் பெற்றோரும் குடும்பத்தினரும் கவலையில் உள்ளனர். உயர்கல்வி தொடர்பாக நானும் எனது கல்லூரி எடுக்கும் முடிவுக்காக காத்திருக்கிறேன், ஆனால் இப்போதைக்கு ஆன்லைனில் வகுப்புகள் பயில ஆரம்பித்துள்ளேன்" என்றார்.

எம்பிஏ பயிலும் மாணவர் அஃப்பான் சுஹாயில் கூறும்போது, “எனது விண்ணப்பம் மற்றும் விசா செயல்முறை முடிந்து விட்டது. ஆனால், இந்தியா, கனடா இடையே அண்மையில் நடந்த விஷயங்கள் எங்களை குழப்பிவிட்டன. எனது கல்விக்காக நான் 30 ஆயிரம் கனடா நாட்டு டாலரை கட்டணமாக செலுத்தவுள்ளேன். இந்த மோதல் எனது குடும்பத்தின் வருமானத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இந்த உயர்கல்வியில் சேர்வதை நான் தள்ளிவைப்பேன் அல்லது பிரச்சினைகள் முடிந்த பின்னர் படிப்பேன்" என்றார். கனடாவில் பயிலும் மாணவனின் தந்தை ஜே.கே.வர்மா கூறும்போது, “உயர்கல்வி பயில கனடாதான் செல்வேன் என்று மகள் முடிவு செய்திருந்தாள். அங்குள்ள எச்இசி மான்டிரியல், ராயல் ரோட்ஸ் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து வைத்திருந்தோம். ஆனால் இந்தப் பிரச்சினை காரணமாக தற்போது பிரான்ஸுக்கு சென்று உயர்கல்வி பயில இருக்கிறாள் என் மகள்” என்றார்.

ஐஸ்கூல்கனெக்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியுமான வைபவ் குப்தா கூறும்போது, “ஏற்கெனவே கனடாவில் உயர்கல்வி பயில எங்கள் நிறுவனம் மூலம் தொடர்பு கொண்டவர்கள் தற்போது கனடாவைத் தவிர்த்து வருகின்றனர். அவர்கள் இப்போது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைத் தேர்வு செய்கின்றனர். இதுதவிர பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து நாடுகளையும் அவர்கள் தேர்வு செய்து வருகின்றனர்’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.