நாங்குநேரியில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம்: ஒரு நபர் குழு அமைத்து அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 25, 2023

நாங்குநேரியில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம்: ஒரு நபர் குழு அமைத்து அரசாணை வெளியீடு

நாங்குநேரியில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம்: ஒரு நபர் குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: நாங்குநேரியில் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஒரு நபர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை விவரம்; முதல்வரின் அறிவிப்பின்படி பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே சாதி, இன பிரச்சினைகள் இல்லாத சூழலை உருவாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு இந்த விவகாரம் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளைப் பெற்று அதன் அடிப்படையில் அரசுக்கு 6 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

இதுதவிர பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் இணை இயக்குநர் ஏ.அனிதா, அரசின் சார்பில் ஒரு நபர் குழுவில் இணைந்து செயல்படுவார்.

மேலும், இந்தக் குழு மாணவர்கள் இடையே சாதி, இன பிரச்சினைகள் இல்லாத சூழலை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

மாணவர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஏதுவான அமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க வேண்டும் ஆகியவை உட்பட பல்வேறு விதிமுறைகள் ஒரு நபர் குழுவுக்கு வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.