'எமிஸ்' சார்ந்த பணிகளால் கூடுதல் சுமை கற்பித்தலில் கவனம் செலுத்த முடியல - ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 5, 2023

'எமிஸ்' சார்ந்த பணிகளால் கூடுதல் சுமை கற்பித்தலில் கவனம் செலுத்த முடியல - ஆசிரியர்கள் அதிருப்தி

'எமிஸ்' சார்ந்த பணிகளால் கூடுதல் சுமை கற்பித்தலில் கவனம் செலுத்த முடியல - ஆசிரியர்கள் அதிருப்தி

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சுயவிவரங்கள், வருகைப்பதிவு, வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் யாவும், எமிஸ் இணைய தளத்தில் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை தராத மாணவர்கள் இருப்பின், அதற்கான காரணத்தை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதோடு,அந்த மாணவர்கள் வீடுகளுக்கு சென்று பள்ளிக்கு மீண்டும் வருவதற்கான, வழிவகை செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளு க்கு முக்கியத்துவம் அளிப்பது கடந்து, எமிஸ் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தகவல்களை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது போன்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. www.kalviseithiofficial.com இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், பள்ளிகளில் கற்பித்தல் பணிகளுக்கு இடையே, மாணவர்களின் எல்லா விவரங்களும் சார்ந்த தகவல்களையும் பதிவு செய்வதோடு, அதில் அப்டேட் செய்ய வேண்டியதும் உள்ளது.

அதேநேரம், பல நேரங்களில் பல தகவல்களை பதிவு செய்யுமாறு, அழுத்தம் தரப்படுகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு தெரிவிக்கும் முதன்மைக் கல்வி அலுவலகம், கற்பித்தல் பணிகளை திறம்பட மேற்கொள்வதில் கவனம் செலுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதில்லை.

இதனால், வேறுவழியின்றி ஆசிரியர்களும் எமிஸ் இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்வதற்கே முக்கியத்துவம் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது, 3 முதல் 14 நாட்களுக்கு உள்ளாக பள்ளிக்கு வருகை தராதவர்கள், 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வருகை தராதவர்களின் பட்டியலில், அவர்கள் பள்ளிக்கு வருகை தராத காரணத்தை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அவர்களின் வீடு தேடிச் சென்று பள்ளிக்கு மீண்டும் அழைத்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வேலைநேரத்தில் வெளியே செல்லக்கூடாது என்ற நிலையில், எந்த நேரத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு செல்வது என்ற கேள்வி எழுகிறது. இது போன்று அடிக்கடி எமிஸ் விவகாரத்தில் அழுத்தம் கொடுக்கும்போது, கற்பித்தல் பணிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. www.kalviseithiofficial.com

இதன்காரணமாக, தேர்வு முடிவுகளில் சரிவு ஏற்பட்டால், அதற்கும் ஆசிரியர்களையே விளக்கம் கேட்கும் நிலை உள்ளது.

ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட வேண்டும்.

அதேநேரம், எமிஸ் சார்ந்த பணிகளில், வட்டார வள மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஆகியோரை ஈடுபடுத்தலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.