உதவி ஆய்வாளர் தேர்வில் சிறப்பு இட ஒதுக்கீடு - சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 25, 2023

உதவி ஆய்வாளர் தேர்வில் சிறப்பு இட ஒதுக்கீடு - சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவு



உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கு: சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவு

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ்பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்று, கடந்த மே 5-ம் தேதியன்றுஅறிவிப்பு வெளியிட்டுள்ளது.



ஆணாகவோ பெண்ணாகவோ தேர்வு:

ஆனால், இந்த அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களது பாலினத்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. உடற்தகுதி தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை.

எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் உரிய சலுகைகளை வழங்கி திருத்த அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். குறிப்பாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்'' என அதில் கோரியிருந்தனர்.

தலைமை நீதிபதி அமர்வு:

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில்வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள்,இது தொடர்பாக தமிழக அரசும், சீருடைப்பணியாளர் தேர்வாணையமும் வரும்செப்.26-க்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.