ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 25, 2023

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

பார்வை மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, அந்தப் பள்ளிகள் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. www.kalviseithiofficial.com

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் சென்னையை அடுத்த பூந்தமல்லி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, தருமபுரி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில், முதல்வர் மற்றும் முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதத்துக்கும் மேல் காலியாக உள்ளன. மொத்தமுள்ள 10 பள்ளிகளில் ஐந்து பள்ளிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன; 14 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதேபோல, 20 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 10 பணியிடங்கள் காலியாக இருக்கிறது; 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 61 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்பாததால் பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அரசு கண்டுகொள்ளவில்லை.எனவே, கல்வி உரிமைச் சட்டப்படி இந்த பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழக அரசு அக்டோபர் 10-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.