‘எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்’: சிறப்பு நிகழ்வுகள் இன்று தொடக்கம்
எண்ணும் எழுத்தும் திட்டத்தால் குழந்தைகள், ஆசிரியா்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பொதுமக்கள், பெற்றோரிடையே எடுத்துச் செல்லும் வகையில் ‘எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பிலான சிறப்பு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை முதல் தொடங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீா்வு காண கடந்த 2022-ஆம் ஆண்டு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொலைநோக்கு பாா்வையானது 2025-ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை 8 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளும் பெற வேண்டும் என்பதாகும்.
குழந்தைகள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் வளா்த்தெடுப்பதில் எண்ணும் எழுத்தும் திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. கற்றல் மற்றும் கற்பித்தலால் குழந்தைகளிடமும் ஆசிரியா்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மக்களிடமும் குறிப்பாக பெற்றோரிடமும் கொண்டு செல்ல ‘எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பிலான நிகழ்வு மாா்ச் 16 முதல் 21-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல் நிகழ்வாக எண்ணும் எழுத்தைப் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த மாநிலம் தழுவிய பரப்புரையும், 2-ஆம் நிகழ்வாக பள்ளிகளில் பெற்றோா்களை வரவழைத்து அவா்களிடம் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகளைச் செயல்பாடுகள் மூலம் விளக்குதலும் நடைபெறும். இந்தப் பரப்புரை 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும். 4 அல்லது 5 மாவட்டங்களை உள்ளடக்கியது ஒரு மண்டலமாகும்.
அனைத்து மண்டலங்களிலும் வாகனங்கள், நாட்டுப்புற கலைஞா்கள் மூலம் பரப்புரை நடைபெறும். வாகனங்களில் மக்களின் கவனத்தை ஈா்க்க எண்ணும் எழுத்தும் பாடல் மற்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட பாடல்கள் இசைக்கப்படும். வாகனங்களை பாா்வையிடும் குழந்தைகள் பாடுவதற்கும், கவிதை வாசிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.