நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 18, 2023

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணை

Ordinance adding fox and sparrow communities to the Schedule of Tribes

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இனங்களை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை அடுத்து, நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் 37-வது இனமாக சேர்த்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.

அதற்கேற்ப நரிக்குறவன், குருவிக்காரன் பிரிவினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெறுவதற்கான தகுதியடைய ஏதுவாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை சார்பில் நேற்று முன்தினம் தமிழக அரசும் அரசாணையை வெளியிட்டது. அதேநேரம், ‘நரிக்குறவன், குருவிக்காரன்’ என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதை ‘நரிக்குறவர், குருவிக்காரர்’ என்று திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரியுள்ளார். இதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. எனவே, வரும் கல்வி ஆண்டிலேயே இப்பிரிவுகளை சேர்ந்த அனைவரும் பழங்குடியினர் சான்றிதழ்களை பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசு வெளியிட்டவாறே தமிழக அரசும் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. வரும் நாட்களில் தமிழக அரசு கோரியவாறு பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடும்போது, தமிழக அரசும் அதை திருத்தி வெளியிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.