தமிழக நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது - ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 20, 2023

தமிழக நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது - ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

தமிழக நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது.

ஆனால் கல்விவளர்ச்சியைமேற்கொள்ளும் ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள்எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் போராட்டத்தை தீவிர படுத்த வேண்டியுள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 40,299 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட சுமார் ரூ 3,400 கோடி அதிகமாகும். இதனை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனப்பூர்வமாக வரவேற்கிறது. இந்த நிதி ஒதுக்கீட்டின்படி ரூ. 1500 கோடியில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் கட்டப்படும். மாவட்டங்கள் தோறும் புத்தகத் திருவிழா,அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் என்ற வரவேற்கத் தகுந்த அறிவிப்புகளும் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் கூறப்படவில்லை. ஆசிரியர், அரசு ஊழியர் நலன் சார்ந்த நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை. இது பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்பார்த்து வரும் ஆசிரியர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை தீர்க்க வேண்டும். இவைகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான தீர்வுகளை இந்த நிதிநிலை அறிக்கையில் வெளியிடுவார்கள் என ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அதற்கான சிறு தடயமும் கூட இந்த நிதிநிலை அறிக்கையில் தென்படவில்லை. ஏற்கனவே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டங்களுக்கு எண்ணெய் வார்ப்பது போல் நிதிநிலை அறிக்கை உள்ளது. வெளியில் பேசுகின்ற போது கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்று சொல்லும் ஆட்சியாளர்கள், சட்டமன்றத்தில் பேசும் போது மட்டும் மௌனமாகி விடுகிறார்கள். இந்த அரசின் மூன்றாவது நிதிநிலை அறிக்கையிலும் ஏதும் சரிசெய்யப்படவில்லை என்பதை பார்க்கும் போது, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலனில் இவர்களுக்கு அக்கறை இல்லையோ என்று அச்சம் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தீவிர படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. துறை சார்ந்த மான்ய கோரிக்கையின் போது இதற்கான தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அதிலும் தீர்வு ஏற்படுத்தப்படாவிட்டால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டத்தை தீவிரப்படுத்தும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

*தங்கள்*

*ந.ரெங்கராஜன்,*

*பொதுச்செயலாளர், TESTF*

*இணைப்பொதுச்செயலாளர், AIPTF.*

*பொதுச்செயலாளர், WTTF.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.