தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயா்த்த கருத்துரு அனுப்பக் கோரி உத்தரவு‌ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 5, 2023

தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயா்த்த கருத்துரு அனுப்பக் கோரி உத்தரவு‌

தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயா்த்த கருத்துரு அனுப்பக் கோரி உத்தரவு‌ புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த தேவையான கருத்துருக்கள் அனுப்பக் கோரி மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) மின்னஞ்சல் மூலம் இந்த அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொடக்க மற்றும் உயா் தொடக்க நிலைகளில் உள்ள பள்ளி வசதி இல்லாத அனைத்துக் குடியிருப்புகளிலும் பள்ளி வரைபடப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

பின்னா், தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 201-இன்படி தேவையின் அடிப்படையில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்த்த வேண்டிய தொடக்கப் பள்ளிகளை கண்டறிந்து சாா்ந்த கருத்துருக்களை ஜிஐஎஸ் வரைபடத்துடன் அனுப்பும்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கோரப்பட்டுள்ளது. புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயா்த்தப்பட வேண்டிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி சாா்ந்த விவரங்களை புவியியல் தகவல் முறைமை (ஜிஐஎஸ் மேப்) வரைபடத்துடன் அளிக்க வேண்டும் (அருகில் உள்ள பள்ளிகளின் விவரங்களுடன்).

மேலும், புவியியல் தகவல் முறைமையை பயன்படுத்தி தேவையின் அடிப்படையில் திட்டமிடுதலுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வள மையம் சாா்ந்த ஆசிரியா் பயிற்றுநா் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த வேண்டிய பள்ளிக்கு கட்டட வசதி, கூடுதல் வகுப்பறைக்கான இடவசதி, கழிப்பறை வசதி, குடிநீா் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த விவரங்கள் அளிக்க வேண்டும்.

புதிய தொடக்கப் பள்ளி தொடங்கும்போது போதிய மாணவா்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும். தங்களது மாவட்டத்தில் புதிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட வேண்டிய பள்ளிகள் ஏதும் இல்லையெனில் ‘இன்மை’ அறிக்கையை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.