இலவச கல்வி, மருத்துவம்.. 60% வரியையும் மகிழ்ச்சியுடன் செலுத்தும் ஸ்வீடன் மக்கள்..! - Free education, medical.. Swedish people happily pay 60% tax..!
இந்தியாவில் பட்ஜெட் தாக்கலான பிறகு வருமான வரியில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற கணக்கீடுகள் இப்போதே தொடங்கிவிட்டன. ஆனால் சில நாடுகளில் 60% வரி வசூலிக்கப்பட்டாலும் மக்கள் மகிழ்ச்சியாக வரி செலுத்துகின்றனர். இந்தியாவில் மாத சம்பளம் பெறுவோருக்கு அதிகபட்சமாக 30% வரி விதிக்கப்படுகிறது. ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் சுமார் 60% வரை வரி வசூலிக்கப்படுகிறது. உலக அளவில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இரண்டாம் இடம்பிடித்திருப்பது ஸ்வீடன். இந்நாட்டில் தனி நபர் வருமான வரி குறைந்தபட்சமாக 29 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. அதிகபட்சமாக 60 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் வருமான வரி குறித்து எப்போதும் மக்கள் விமர்சனங்களையே முன்வைப்பர். ஆனால் ஸ்வீடனிலோ முற்றிலும் மாறாக மிக மகிழ்ச்சியாக வரி செலுத்துகின்றனர்.
இதற்கு ஸ்வீடனில் செயல்படுத்தப்படும் சமூக நல திட்டங்களே காரணம். மேலும் இங்கு வசிக்கும் மக்கள், தாங்கள் செலுத்தும் வரி, ஸ்வீடனில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும், நாட்டு நலனுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளக்குறியீட்டில் உலகளவில் சுவீடன் 6 ஆம் இடத்தில் உள்ளது. ஸ்வீடன் குடிமக்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் தேவைப்படும் அடிப்படை வசதிகள், சமூக நலத்திட்டங்களாக அரசால் நடைமுறைபடுத்தப்படுகின்றன
ஸ்வீடனில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியர் 80% ஊதியத்துடன் 480 நாட்கள் வரை மகப்பேறு விடுமுறை எடுக்க முடியும். இந்த விடுமுறையை கணவன் மனைவி இருவரும் பகிர்ந்து எடுத்துக்கொள்ள முடியும். அதாவது கணவன் 50 நாட்களும், மனைவி 430 நாட்களும் என்று பகிர்ந்து கொள்ளலாம். விடுமுறை கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் 60-70% ஊதியத்துடன், விடுமுறை நீட்டிப்பும் உண்டு. குழந்தை வளர்ந்ததும், அக்குழந்தைக்கு தேவையான ஆரம்ப கல்வி இலவசமாகவே வழங்கப்படுகிறது. மேலும் அக்குழந்தைக்கு தேவையான மதிய உணவும் பள்ளிகளிலேயே வழங்கப்படுகிறது. இந்த வசதிகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் இருப்பதால் ஸ்வீடன் வாசிகள் மகிழ்ச்சியுடன் இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவிக்கின்றனர் அதே, ஸ்வீடனில் இலவச மருத்துவ வசதிகளும் உண்டு, அதிலும் குறிப்பாக 18 வயது வரை குழந்தைகளுக்கு ஏற்படும் பல் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளும் இலவசமாகவே வழங்கப்படும் வகையில் திட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகையும், சிறந்த சிகிச்சையும் வழங்கும் வகையில் சிறப்பு திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.
அதுமட்டுமின்றி இக்குழந்தைகளை பராமரிக்க சிறப்பு நிதியாக ஒவ்வொரு ஆண்டும் 1080 யூரோக்கள் வழங்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வீடனில், பள்ளியில் இருந்து வரும் தங்கள் குழந்தையை அழைத்து வர, தாயோ அல்லது தந்தையோ அலுவலகத்தில் இருந்து முன்கூட்டியே செல்ல நேர்ந்தால், அந்த 1 மணி நேரத்திற்கான ஊதியத்தை அரசே வழங்கும் வகையில் திட்டம் உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்வீடனில் இருக்கும் முக்கிய திட்டங்களுள் சிறப்பு வாய்ந்தது முதியோர் பாதுகாப்பு திட்டங்களும், ஓய்வூதியமும் தான். இங்கு தாங்கள் ஒய்வு பெறும் வயதை ஊழியர்களே தீர்மானித்துக்கொள்ள முடியும். உதாரணமாக 61 வயதிலும் ஒருவர் ஓய்வு பெறலாம். அல்லது 70 வயதிலும் ஒருவர் ஓய்வு பெறலாம். எவ்வளவு அதிகமான காலம் ஒருவர் பணி புரிகிறாரோ, அவரின் ஓய்வூதியமும் அந்தளவு அதிகரிக்கும் ஒருவர் குறிப்பிட்ட காலம் பணிபுரியாமல் இருந்தால், அவருக்கு மிக குறைந்தபட்சமாக 40 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவருக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை எனில், அவர் அதற்கு முன்பு பெற்ற ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு 80% தொகை உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் வேலையில்லாமல் இருக்கும் ஒருவருக்கும் பணி வாய்ப்புகளையும், அரசே வழங்கும், அவருக்கு போதிய அளவு திறன்கள் இல்லாவிட்டால், உரிய பயிற்சி வழங்கும் வகையில் ஸ்வீடனில் பல்வேறு திட்டங்கள் உண்டு.
ஸ்வீடனில் வாழும் குடிமகன் ஒருவர், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வது தெரியவந்தால், அவ்வூரில் உள்ள மாவட்ட நிர்வாகமே அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக்கொடுப்பது மட்டுமல்லாமல், வாடகை கட்டணத்தை செலுத்தும் வகையில் உதவித்தொகை வழங்கவும் திட்டங்கள் உண்டு. பிறப்பு முதல், இறப்பு வரை அரசின் திட்டங்கள் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாலேயே குடிமக்களும் தங்கள் வருவாயில் 60 சதவீதம் வரை வரியாக செலுத்த எந்த தயக்கமும் காட்டுவதில்லை.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.