குழந்தையை அடிக்க பிரம்பு பரிசளித்த பெற்றோர்: எதிர்ப்பும் ஆதரவுமாக குவிந்த கருத்துக்கள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 31, 2023

குழந்தையை அடிக்க பிரம்பு பரிசளித்த பெற்றோர்: எதிர்ப்பும் ஆதரவுமாக குவிந்த கருத்துக்கள்!



குழந்தையை அடிக்க பிரம்பு பரிசளித்த பெற்றோர்: எதிர்ப்பும் ஆதரவுமாக குவிந்த கருத்துக்கள்! Parents who gifted a cane to beat the child: Opinions gathered in support and opposition!

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது நான்கு வயது மகனை பள்ளியில் சேர்த்துவிட்டு, தவறு செய்தால் அவனை அடியுங்கள் என நான்கு அடி நீள பிரம்பையும் தலைமையாசிரியருக்கு பரிசாகக் கொடுத்தனர். இந்தப் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. தம்பதியின் இச்செயலுக்கு சிலர் ஆதரவாகவும், குழந்தை நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். செல்லூரைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன். இவரது மனைவி தமிழரசி. இவர்களது நான்கு வயது மகனைப் பள்ளியில் சேர்த்துள்ளனர். அந்த காலத்தில் பிள்ளைகளை வழிக்கு வரவில்லை என்றால், கண்ணை மட்டும் விட்டுவிட்டு தோலை உரியுங்கள் என்பார்கள். இன்று குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் கல்வி பயிற்றுவிக்க வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சங்கரபாண்டியன், தனது மகனைச் சேர்த்துவிட்டு, நான்கு அடி நீள பிரம்பை தலைமையாசிரியருக்கு பரிசாக அளித்தார். “சரியாக படிக்கவில்லை என்றால் அடித்து பாடம் சொல்லிக் கொடுங்கள். அவன் நல்ல முறையில் வர வேண்டும்.” என்றார்.

அவரது செயலுக்கு ஆதரவாக சிலர், “ஆம் மாணவர்கள் அடங்கவில்லை என்றால் அடித்து தான் வழிக்கு கொண்டு வர வேண்டும்” என கூறியுள்ளனர். “வாத்தியாரிடம் அடிவாங்காத மாணவர்கள் போலீசிடம் அடிவாங்க நேரிடலாம்” என பழைய வசனத்தை சிலர் தூசி தட்டி கொண்டு வந்திருந்தனர். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது, அடி உதவுவது போல் வேற எதுவும் உதவாது இப்படியாக ஆதரவு கருத்துக்கள் வந்துள்ளன.

ஆனால் குழந்தை நல ஆர்வலர்கள், ஆரம்பப் பள்ளிச் செல்லும் குழந்தைகளை உடைய பெற்றோர்கள் பலரும் இச்செயலை கடுமையாக கண்டித்துள்ளனர். தவறான அணுகுமுறை என்றும், கண்டிப்பு இருந்தால் போதும், அடிக்க வேண்டிய அவசியமில்லை, அது சட்டப்படியும் தவறு என சுட்டிக் காட்டியுள்ளனர். ஒரு நாள் செய்தியில் வர இது போன்று செய்திருக்கலாம் என சிலர் கூறியுள்ளனர். பிரம்பினை தீயிட்டுக் கொளுத்துங்கள் குழந்தை எழுத்தாளரும், தமிழக அரசின் கல்விக்கொள்கை உபகுழுவின் உறுப்பினருமான விழியன் என்கிற உமாநாத், பிரம்பு பரிசளித்த சம்பவம் குறித்து தனது கருத்தினை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் “உங்கள் மகன் நன்றாகப் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தைப் பாராட்டுகின்றேன் ஆனால் அதற்கான வழிமுறைகளில்தான் சிக்கலே. பல குழந்தைகள் கல்வியில் இருந்து விடுபட்டுப் போய்விடுவதற்கான காரணமும் இதுவே. மகிழ்ச்சியான சூழலிலே கற்றல் நடைபெறும். பயந்த, அஞ்சிய வகுப்பறைகளில் மாணவர்கள் கற்பது மிகவும் குறைவு. சிந்திப்பது அதைவிடவும் குறைவு. ஒருவித அடிமை மனோபாவத்திலேயே வளர்வார்கள்." என தெரிவித்துள்ளார்.

மேலும், “கல்வி என்பதே விடுதலைதானே? அடிமைத்தனத்திலிருந்து விடுதலை. அறியாமையிலிருந்து விடுதலை. பிரம்புகளை அடிமைகளை அடக்கவே பயன்படுத்தி வந்துள்ளனர். தங்கள் மகன் இப்போதுதான் எல்.கே.ஜி., சேருவார். அவரை அடிக்க 4 அடி பிரம்பு கொடுக்க எப்படி மனது வந்தது தெரியவில்லை. பிரம்புகள் தீர்வல்ல. அறிவியல்பூர்வமான அணுகுமுறைகளே தீர்வு. கொடுத்த பிரம்பினை வாங்கி தீயிட்டுக் கொளுத்துங்கள்.” என காட்டமாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.