மாணவர்களை ஈர்க்கும் 'மரைன் என்ஜினீயரிங்' - யாரெல்லாம் படிக்கலாம்?, எவ்வளவு செலவாகும்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 31, 2023

மாணவர்களை ஈர்க்கும் 'மரைன் என்ஜினீயரிங்' - யாரெல்லாம் படிக்கலாம்?, எவ்வளவு செலவாகும்?



மாணவர்களை ஈர்க்கும் 'மரைன் என்ஜினீயரிங்' - யாரெல்லாம் படிக்கலாம்?, எவ்வளவு செலவாகும்?

மாணவர்களை ஈர்க்கும் 'மரைன் என்ஜினீயரிங்' - 'Marine Engineering' attracts students

* மரைன் என்ஜினீயரிங்

கப்பல் கட்டுமானம், என்ஜின் செயல்பாடு, பராமரிப்பு, கடல் அமைப்பு, பன்னாட்டு கடல்சார் விதிமுறைகள், கடல்சார் தொழில்நுட்பம் போன்றவை இப்படிப்பில் இடம்பெறும். ஓஷன் என்ஜினீயரிங், நேவல் ஆர்க்கிடெக்சர், நாட்டிக்கல் சயின்ஸ் உள்ளிட்டவை மரைன் என்ஜினீயரிங் சார்ந்த இதர படிப்புகள். சர்வதேச அளவில் கடல்சார் போக்குவரத்து மிக வேகமாக அதி கரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் மரைன் என்ஜினீயரிங் மற்றும் அது தொடர்பான படிப்புகளை படிப்பவர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. கடல் பயணம், சாகசம், பன்னாட்டுச்சூழல் போன்றவற்றில் ஆர்வம் உடைய மாணவர்களுக்கு இது ஏற்ற படிப்பாகும். * யாரெல்லாம் படிக்கலாம்?

மரைன் என்ஜினீயரிங் படிப்பானது ஒருசில கல்வி நிறுவனங்களில் பி.டெக் படிப்பாகவும், இன்னும் சில கல்லூரிகளில் பி.இ. படிப்பாகவும் வழங்கப்படுகிறது. பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் படித்துள்ள மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள் எனில் பிளஸ் 2 மதிப்பெண் (கணிதம், இயற்பியல், வேதியியல்) அடிப்படையிலும், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் எனில் அவை நடத்தும் சிறப்பு நுழைவுத்தேர்வு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு மூலமாகவும், ஐ.ஐ.டி. எனில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு மூலமாகவும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். சென்னையில் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பி.டெக் மரைன் என்ஜினீயரிங், பி.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஓஷன் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு சிறப்பு நுழைவுத்தேர்வை நடத்துகிறது.

* எவ்வளவு செலவாகும்?

கல்விக்கட்டணத்தைப் பொறுத்தவரையில், மரைன் என்ஜினீயரிங் படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் செலவாகும். உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப இந்த கட்டணம் கல்லூரிக்கு கல்லூரி சற்று மாறுபடும். கல்விக்கட்டணம் அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்படத் தேவையில்லை. மரைன் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு வங்கிகள் தாராளமாக கல்விக்கடன் கொடுக்கின்றன. இதர பொறியியல் படிப்புகளுடன் ஒப்பிடும்போது படிப்புக்கான செலவு அதிகம் என்றாலும், படித்து முடித்து வேலைக்குச் சென்றதும் கிடைக்கும் சம்பளமும் அதிகம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மரைன் என்ஜினீயர்கள் பயிற்சி நிலையிலேயே ரூ.40 ஆயிரம் சம்பளம் பெறலாம். பணியில் சேர்ந்ததும் ஆரம்ப நிலையில் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். அனுபவமும், பதவி உயர்வுகளும் வர வர சம்பளமும் லட்சத்தில்தான் அதிகரிக்கும். மரைன் என்ஜினீயர்களுக்கு அரசு துறைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் மிகுதி. வெளிநாட்டு கப்பல்களில் வேலை என்றால் ஊதியம் அதிகமாக இருக்கும் என்பதை சொல்லவே வேண்டாம். * உயர்கல்விகள் உண்டா?

நவீன சாதனங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களால் மரைன் என்ஜினீயரிங்கில் பணியின் தன்மை பரந்து விரிந்துள்ளது. அவற்றுள் கடல்சார் போக்குவரத்து, நேவல் ஆர்க்கிடெக்சர், பாதுகாப்பு, தொலையுணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சர்வதேச பருவநிலை கண்காணிப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மரைன் என்ஜினீயரிங் மற்றும் அதுசார்ந்த படிப்புகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகளும் மிகுதியாகவே உள்ளன. இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் மரைன் என்ஜினீயரிங், எம்.டெக் நேவல் ஆர்க்கிடெக்சர் படிக்கலாம். சென்னை மற்றும் கரக்பூர் ஐ.ஐ.டி.யில் ஓஷன் என்ஜினீயரிங்கில் எம்.டெக் படிப்பு வழங்கப்படுகிறது. சென்னை அமெட் நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்பட குறிப்பிட்ட சில கல்லூரிகள் மரைன் என்ஜினீயரிங்கில் எம்.டெக் படிப்பை வழங்குகின்றன.

சாதாரணமாக மரைன் என்ஜினீயரிங் பட்டப் படிப்பை முடித்து பணியில் சேருவோர் 7 ஆண்டுகளில் சீப் என்ஜினீயர் ஆகிவிடலாம். அவர்கள் பயணியர் கப்பல், சரக்கு கப்பல் (Cargo ship), டேங்கர் கப்பல் (எண்ணெய், இயற்கை எரிவாயு) என பல்வேறு வகையான கப்பல்களில் பணியாற்ற முடியும். அதற்கேற்ப பணியின் தன்மையும் மாறுபடும்.

பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரிகளும் மரைன் என்ஜினீயர் ஆக முடியும். அவர்கள் கிராஜுவேட் இன் மரைன் என்ஜினீயரிங் என்ற ஓராண்டு கால படிப்பை முடித்துவிட்டு கிளாஸ்-4 மரைன் என்ஜினீயராக பணியில் சேரலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.