பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. கெத்து காட்டிய காங்கிரஸ் - கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 14, 2023

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. கெத்து காட்டிய காங்கிரஸ் - கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள்

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. கெத்து காட்டிய காங்கிரஸ் - கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள்

இமாச்சலப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அங்கு புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது.

காங்கிரஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தினை, ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு அமல்படுத்தியதை அரசு ஊழியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இமாச்சலில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலானதை அடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில அரசு ஊழியர்கள் மத்தியிலும் இந்தக் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது

தூக்கியெறியப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் 2003-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் காலம் காலமாக தொடர்ந்து வந்தது. இதனிடையே, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியவம் வழங்குவதற்கே அரசு நிதி பெருமளவில் செலவிடப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்த ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அரசு ஊழியர்களின் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் 2004-ம் ஆண்டு முதல் பல மாநிலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களின் சம்பளத்திலேயே ஒருபகுதி பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கே ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இப்போது வரை தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும், நிதி செலவினத்தை கருத்தில்கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தயாராக இல்லை.

காங்., கொடுத்த வாக்குறுதி

இந்நிலையில், இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்பதே இருந்தது. இதனை அப்போது ஆட்சியில் இருந்த பாஜக கடுமையாக விமர்சித்தது. ஆட்சிக்கு வருவதற்காக காங்கிரஸ் இவ்வாறு வாக்குறுதி அளிப்பதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்து வந்தது. எனினும், இந்த வாக்குறுதிக்காகவே அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் காங்கிரஸுக்கு வாக்களித்தனர். இதனால் அமோக வெற்றி பெற்று இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலை கைப்பற்றியது. காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்வீந்தர் சிங் முதல்வராக பதவியேற்றார். வாக்குறுதி நிறைவேற்றம்

இந்நிலையில், ஆட்சிப்பொறுப்பேற்ற ஒருசில மாதங்களிலேயே அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு அமல்படுத்தியுள்ளார். இதற்கான கோப்பில் அவர் நேற்று இரவு கையெழுத்திட்டார். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவதால் இமாச்சலில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு தெரிவித்தார். மேலும், இத்திட்டத்தால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.800 கோடி முதல் ரூ.900 கோடி வரை செலவாகும் எனவும் அவர் தெரிவித்தார். இருந்தபோதிலும், அரசு ஊழியர்களின் நலனுக்காக இத்திட்டத்தை முழு மனதுடன் காங்கிரஸ் செயல்படுத்துகிறது என்றும் முதல்வர் சுக்வீந்தர் சிங் கூறினார். இதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களின் வரிசையில் 7-வது மாநிலமாக இமாச்சலும் இடம்பெற்றிருக்கிறது.

1 comment:

  1. இந்த மாநிலங்களில் அமுல் படுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகிறது. அதை தெடர்ந்து செய்திகள் எதுவுமில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.