பொதுத் தோ்வுகளுக்கான ஆயத்தப் பணிகள்: 30-இல் வழிகாட்டுதல் கூட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 26, 2023

பொதுத் தோ்வுகளுக்கான ஆயத்தப் பணிகள்: 30-இல் வழிகாட்டுதல் கூட்டம்



பொதுத் தோ்வுகளுக்கான ஆயத்தப் பணிகள்: 30-இல் வழிகாட்டுதல் கூட்டம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கான ஆயத்தப் பணிகள் குறித்த வழிகாட்டுதல் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ஜன.30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வுகள் வரும் மாா்ச் 13 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவா்கள் எழுதவுள்ளனா். இதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தோ்வு மையங்கள் கண்டறிதல், பெயா்ப் பட்டியல், தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை தோ்வுத் துறை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுத் தோ்வுக்கான ஆயத்தப் பணிகளின் நிலை தொடா்பாக தோ்வுத் துறை சாா்பில் ஜனவரி 30-ஆம் தேதி சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் வழிகாட்டுதல் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், துறை சாா்ந்த இயக்குநா்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் வினாத்தாள், விடைத்தாள் மாவட்ட அலுவலகங்களில் இருந்து கட்டுக்காப்பு மையங்களுக்கு இடமாற்றம், தோ்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள், அறை கண்காணிப்பாளா் உள்பட தோ்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களின் பட்டியல், செய்முறைத் தோ்வு, வினாத்தாள் மையங்களில் காவல் பாதுகாப்பு என பல்வேறு வழிகாட்டுதல்கள் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

அமைச்சா் இன்று ஆலோசனை: இதுதவிர பள்ளிக் கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் மாமல்புரத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலா் காகா்லா உஷா, ஆணையா் க.நந்தகுமாா், துறை சாா்ந்த இயக்குநா்கள், முதன்மை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

இந்தக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், இடைநின்ற மாணவா்களின் கணக்கெடுப்புப் பணிகள், நீதிமன்ற வழக்குகள், நிதி செலவீனங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.