“மாணவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆசிரியர்களை குற்றம் கூற முடியாது' - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 4, 2022

“மாணவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆசிரியர்களை குற்றம் கூற முடியாது'

“மாணவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆசிரியர்களை குற்றம் கூற முடியாது'

'மாணவர்களின் ஒவ்வொரு செயலுக்கும், ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை குற்றம் கூற முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் யுவராஜ், 2017 ஆகஸ்ட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால், தன் மகன் தற்கொலை செய்ததாகவும், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் மாணவனின் தாய் கலா வழக்கு தொடர்ந்தார்.

அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர் மைத்ரி சந்துரு, ''மாணவர்களிடம் ஒழுக்கத்தை பேண, தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

''அவரது நடவடிக்கையால், 45 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் 90 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து, தலைமை ஆசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தவறானது என்பது தெரிகிறது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:

மாணவன், வகுப்புக்கு ஒழுங்காக வருவதில்லை என்பதும், பள்ளியில் ஒழுங்கை பேண தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்திருப்பதும், மாணவனின் தற்கொலைக்கு அவர் காரணம் அல்ல என்பதும், மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையிலும், மனுதாரர் தரப்பில் எழுப்பிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதும், மாணவன் தற்கொலைக்கும், தலைமை ஆசிரியருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

பொதுவாக, ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை அவதுாறு செய்யும் வழக்கத்தை ஏற்க முடியாது. அவர்களின் தவறான நடத்தையை, போதிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் மட்டுமே, பொறுப்பாக்க முடியும்.

கல்வித் துறையால் தடை செய்யப்பட்ட தண்டனையை மாணவர்களுக்கு வழங்கினால் மட்டுமே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியும்.

பள்ளி மாணவர்களின் ஒவ்வொரு செயலுக்கும், ஆசிரியர், தலைமை ஆசிரியரை குற்றம் கூற முடியாது.

தற்கொலை சம்பவம் நிகழ்ந்து விட்டால், எந்த ஆதாரமும் இன்றி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை பெற்றோரும் குற்றம் கூறக் கூடாது.

பொதுவாக குற்றம்சாட்டுவதன் வாயிலாக, பள்ளியின் புகழுக்கு பாதிப்பும், மற்ற மாணவர்களின் நலனுக்கு பாதிப்பும் ஏற்படும்.

குழந்தைகளுக்கு இயற்கையான பாதுகாவலர்கள், பெற்றோர் தான்; பள்ளியில் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பாதுகாப்பு. தங்கள் குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதில், பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியம்.

வீட்டுக்குள்ளும், வெளியிலும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கு உள்ளது.

குழந்தைகளின் உடல்நிலை, மனநிலையை, பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் ஒவ்வொரு குழந்தையின் மனநிலையையும் ஆசிரியரால் கணிக்க முடியாத நிலை ஏற்படலாம். ஆனால், பெற்றோரால் முடியும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, மாணவனின் தற்கொலைக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு அல்ல. அவரை தேவையின்றி இழுத்துள்ளனர். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.