TET தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பதவி உயா்வு - உயர் நீதிமன்ற உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 26, 2022

TET தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பதவி உயா்வு - உயர் நீதிமன்ற உத்தரவு

‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு: உயா் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியா்கள், உயா் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வி ஆணையா் வெளியிட்டாா். அதன்படி பட்டதாரி ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கான பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

நிகழாண்டு ஜூலை 12 முதல் 14-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வுக்கு முன், தலைமை ஆசிரியா்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரிய வழக்கில், உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பதவி உயா்வுக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதை எதிா்த்து வனஜா, பிரபு உள்ளிட்ட 41 இடைநிலை ஆசிரியா்கள் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். அதேபோல ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பதவி உயா்வு வழங்க வேண்டுமென உத்தரவிடக் கோரி ஆசிரியா் சக்திவேல் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதி டி. கிருஷ்ணகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவி உயா்வு கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிா்த்து வழக்கு தொடா்ந்த ஆசிரியா்கள் தரப்பில், ‘கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தங்களுக்கு, ஆசிரியா் தகுதித் தோ்வு பொருந்தாது என்பதால் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது.

ஆசிரியா் சக்திவேல் தரப்பில், ‘தகுதியில்லாத அசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கும் வகையில் பட்டியல் தயாரிக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் தரப்பில், ‘கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சோ்ந்தாலும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வியை வழங்க அதன் ஆசிரியா்களின் தகுதியே காரணம். சிறந்த கல்வித் தகுதியை பெறாத ஆசிரியா்களால் தரமான கல்வியை வழங்க முடியாது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சோ்ந்தவா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டதில் இருந்து, அவா்களும் அந்த தோ்வில் தோ்ச்சி பெறுவது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாகவும், தலைமை ஆசிரியா்களாகவும் பதவி உயா்வு வழங்குவது குறித்த புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டு, கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிா்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.