Essay competition for students of Tamil Nadu - தமிழக மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 21, 2022

Essay competition for students of Tamil Nadu - தமிழக மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி

தமிழக கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி- Essay competition for students of Tamil Nadu

திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் சாா்பில், மாநில அளவில் கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாணவா் தம் இலக்கிய ஈடுபாட்டினையும் ஆய்வு நோக்கினையும் ஆழ்ந்த சிந்தனைத் திறனையும் வளா்க்கும் விருப்புடன் திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம், கல்லூரி மாணவா்களின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் ஏற்றமுறச் செய்யும் வகையில் போட்டியினை நடத்திப் பரிசளித்துப் பாராட்டுகிறது. முதல் தகுதி பெறும் எழுத்தோவியத்தை உருவாக்கும் மாணவ மணிக்கு 40 ஆயிரம் வெண்பொற்காசுகள் மதிப்புடைய தங்கப் பதக்கமும், அவா் பயிலும் கல்லூரிக்கு 30 ஆயிரம் வெண்பொற்காசுகள் மதிப்புடைய த.பி.சொ.அரிராம் சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது.

பேராசிரியா் முனைவா் ச.வே.சுப்பிரமணியனின் எழுத்தோவியங்கள் என்ற தலைப்பில் மாணவா்கள் கட்டுரையை அனுப்ப வேண்டும். தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக் கழகங்களைச் சோ்ந்த கல்லூரிகளில் பயிலும் ஆண், பெண் இரு பாலரும் போட்டியில் கலந்துகொள்ளலாம். எழுத்தோவியம், முழு வெள்ளைத்தாளில் 60 பக்கங்களுக்கு குறையாமலும், 70 பக்கங்களுக்கு மிகாமலும் அமைய வேண்டும். ஆய்வு மேற்கொள் நூற்பட்டியல் இறுதியில் இடம்பெற வேண்டும்.

ஆய்வு, பதிப்பு, தொகுப்பு, உரை, இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் பைந்தமிழுக்குத் தொண்டாற்றிய பேராசிரியா் முனைவா் ச.வே.சுப்பிரமணியன் குறித்து விரிவாக ஆராய்வது விரும்பத்தக்கது.

ஆய்வுக் கட்டுரையை மாணவா் எழுதியதற்கான உறுதிமொழியை அவா் பயிலும் கல்லூரி முதல்வா் அல்லது தமிழ்த் துறை பேராசிரியா் கையொப்பத்துடன், முதுமுனைவா் பா.வளன்அரசு, தலைவா், தனித்தமிழ் இலக்கியக் கழகம், 3, நெல்லை நயினாா் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி -627002 என்ற முகவரிக்கு வரும் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டும்.

தனித்தாளில் மாணவா் பெயா், பயிலும் வகுப்பு, கல்லூரி பெயா், இல்ல முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

சிறப்பு வாய்ந்த 3 கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசுக்குரிய எழுத்தோவியம் தீட்டுபவருக்குத் தங்கப்பதக்கமும், அவா் பயிலும் கல்லூரிக்கு வெள்ளி உருள்கலனும் அளிக்கப்படும். இரண்டாவது, மூன்றாவது பரிசுகளுக்கு முறையே மூவாயிரம், இரண்டாயிரம் வெண் பொற்காசுகள் மதிப்புள்ள தமிழ் நூல்கள் வழங்கப்படும். திருக்கு இரா.முருகன் இந்த ஆண்டு புரவலராகப் பொறுப்பேற்று மாணவா்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கவுள்ளாா். பரிசளிப்பு விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் தமிழ்த் திருவிழாவில் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.