குழந்தைகளுக்கேற்ற பாடத்திட்டம் தேவை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 28, 2022

குழந்தைகளுக்கேற்ற பாடத்திட்டம் தேவை!

எனது நண்பரின் பத்து வயது பெயரன் கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறான். கனடா நாட்டின் கல்வித்தரம் பற்றிய உரையாடல் நடந்தது. உடனே அவர் தன் கைப்பேசியில் அச்சிறுவன் அனுப்பியிருந்த, அவன் தயார் செய்த பாடத்திட்டங்களைக் காட்டினார்.

அவற்றில் ஜப்பான் பற்றி, கனடா பற்றி, சிந்து சமவெளி நாகரிகம் பற்றி பல்வேறு விவரங்களைத் திரட்டி, சிறு புத்தக வடிவில் அமைத்துள்ளான். நான் அசந்து போனேன். தேர்ந்த பத்திரிகை வடிவமைப்பாளரின் நேர்த்தி அதில் இருந்தது. "அவனுக்குப் பெற்றோர் உதவி செய்தார்களா' என்று நான் கேட்டபோது "இல்லை' என்று பதில் வந்தது.

ஒரு நிமிடம் நம்மூர் குழந்தைகளைப் பற்றி நினைக்கத் தோன்றியது. நம் கல்லூரி மாணவர்கள் செய்யும் புராஜக்ட் பற்றி நாம் அறிவோம். பலர் விலைக்கு வாங்கி விடுகிறார்கள். மூளையை கசக்கிக் கொண்டு யோசித்துச் செய்பவர்கள் சிலர். அவை மதிப்பெண்களுக்குக்கானவையே தவிர சமுதாயத்திற்குப் பயன் தருவதற்காக இல்லை.

அதே போல மாணவர்கள் அûஸன்மென்ட் தயார் செய்யும்போதும், ஒரு சிலர் மட்டுமே நூலகத்திற்குச் சென்று புத்தகங்களைத் தேடி எடுத்தும், இணையத்தில் தேடியும் குறிப்பெடுத்து எழுதி தயார் செய்வார்கள். அவர்களின் நண்பர்கள் அதை அப்படியே காப்பி அடித்துக் கொடுத்து விடுவார்கள். சிலர் எதையாவது எழுதிக் கொடுத்து ஒப்பேற்றி விடுவார்கள். எல்லோருக்கும் ஒரே மதிப்பெண் கிடைக்கும்.

நம் பாடத்திட்டங்கள் கல்வியாளர்களால் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கல்வியின் தரத்தில் எதிரொலிக்கவே செய்கிறது. வாய்ப்பும், வசதியும் இருந்தால் கல்வியும் வசப்படும். கல்வியின் தரம் நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களைப் பொறுத்தே மாணவர்களின் கற்றல் திறனும், அறிவும் மேம்படும். மாணவர்களுக்குப் பாடத்தில் ஆர்வம் ஏற்படும்படி பாடம் நடத்த வேண்டும்.

ஒரு தலைப்பு அல்லது சரித்திர நிகழ்வு, செய்யுள் என்று நடத்தும்போது வெறுமனே புத்தகத்தில் உள்ளதை மட்டுமே நடத்துகிறார்கள்; வேறு சிலர் மேலோட்டமாக விளக்குகிறார்கள். இதனால் மாணவர்களுக்குப் புரிவதில்லை. மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகிறார்கள். அதன் காரணமாக அப்பகுதி குறித்த பல்வேறு தகவல்களைத் தேடிப் படிக்கும் ஆர்வமோ, அதை மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ மாணவர்களிடம் ஏற்படுவதில்லை.

அறிவியல் விதிகள், மொழியியலின் அடிப்படை இலக்கணம், சரித்திர நிகழ்வுகள், ஆண்டுகள், தேதிகள் எல்லாம் மாணவர்களின் மனதில் செதுக்கப்பட வேண்டும். இன்று பலருக்கும் தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் எத்தனை என்று தெரியவில்லை. நம் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள், நம் நாட்டில் எத்தனை மாநிலங்கள், காந்தியடிகளின் சுயசரிதையின் பெயர் என்ன எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள்.

தங்கள் துறையில் அவர்கள் சிறந்த அறிவு பெற்றுள்ளவர்கள்; மிகுந்த திறமைசாலிகள். ஆனால் பொது அறிவு குறைவு. தமிழ் மாதங்களின் பெயர்கள் கூட தெரியவில்லை என்றால் என்ன செய்வது? தேர்வில் 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு 65 மதிப்பெண்ணுக்கு பதில் தெரியாது என்று அர்த்தம். அவனும் தேர்ச்சி பெறுகிறான், 95 மதிப்பெண் பெற்றவனும் தேர்ச்சி பெறுகிறான். இருசாராருமே அடுத்த வகுப்பிற்குப் போகிறார்கள். இதுதான் நம் கல்வி முறை.

ஆசிரியர்கள், ஒரு பாடத்தை நடத்துவதற்கு முன் அது பற்றிய அனைத்து குறிப்புகளையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் கூறி விட்டு பாடத்தை நடத்தினால் மாணவர்கள் மனதில் அது நன்கு பதியும். அப்படி நடத்தினால் மாணவர்களிடம் கவனக் குவிப்பு இருக்கும்.

அறிவியல் பாடங்களைப் புரிந்து கொள்வதற்காகத் தான் ஆய்வக வகுப்புகள் உள்ளன. ஆய்வக வகுப்பில் நன்கு விளங்கிக் கொண்டு பின் வகுப்பில் அதை நடத்தும் போது எளிதாகப் புரிந்து கொள்வார்கள். ஆனால் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆய்வகங்களுக்குள் நுழையும் போதே ஏதோ கொலைக்களத்திற்குப் போவதைப் போல போனால் அவர்களால் எதைக் கற்றுக் கொள்ள முடியும்? விலையுயர்ந்த இயந்திரங்கள் என்றால் மாணவர்களைத் தொடக்கூட அனுமதிப்பது இல்லை. கற்றல் ஓர் இனிமையான அனுபவமாக மலர வேண்டும்.

அக்காலத்தில் ஒன்றாம் வகுப்பில் குழந்தையை சேர்த்து விடுவதோடு பெற்றோரின் கடமை முடிந்து விடும். அவர்கள் 11-ஆம் வகுப்பை முடித்து, பின் ஏதோ கிடைத்த பாடப்பிரிவில் கல்லூரியில் சேர்ந்து பட்டம் வாங்கி வேலையிலும் சேர்ந்து விடுவார்கள். எல்லாம் எளிது, இனிது.

வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியில் படித்தார்கள். புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு பெற்றவர்கள் உடன் வர மாட்டார்கள். தனி வகுப்புக்குப் போவது என்றால் கொஞ்சம் அவமானமாக இருக்கும். தவறு செய்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தார்கள்; தண்டித்தார்கள். பெற்றோர் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குப் போனது இல்லை.

காலப்போக்கில் கல்வி வியாபாரமாகிப் போனதால், கல்விக் கூடங்கள் வெறும் மதிப்பெண் பெற வைக்கும் பட்டறைகளாக மாறி விட்டன. இன்றைய கல்வி முறையில் பள்ளி பாதி, வீடு பாதி என்று பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவோ, வீட்டுப் பாடம் செய்ய வைக்கவோ நேரம் இன்றித் தவிக்கிறார்கள்.

பெற்றோர் இருவருமே வேலைக்குப் போகும் நிலையில் இரவு வீடு திரும்ப வெகு நேரம் ஆவதால் பிள்ளைகளுக்கு உதவ முடியாத நிலை. வெறுமனே எழுத வைப்பது, படிக்க வைப்பது என்றால் பாட்டி, தாத்தா பார்த்துக் கொள்வார்கள். ஆனால் இன்றைய சூழலில் எல்லா வீடுகளிலும் இணையத் தொடர்பு இருக்க வேண்டும், மடிக்கணினி இருக்க வேண்டும், வீட்டில் உள்ளவர்களுக்கு இவற்றைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

மழலையர் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை விளக்கப்படம் ("சார்ட்') புராஜெக்ட் தயார் செய்து கொண்டு வரச் சொல்கிறார்கள். சில விளக்கப்படங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. வாங்கி ஓட்டி விடுவது எளிது. ஆனால் இப்போது அப்படித் தருவது கிடையாது. உதாரணத்திற்கு "குகை மனிதனின் ஓவியங்கள்' (ஒன்றாம் வகுப்புக்கு) இதற்கு கடைகளில் படம் இல்லை. கூகிளில் தேடினால் கிடைக்கிறது. அதை கணினியில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்ட வேண்டும். கணினி பற்றிய அறிவு இல்லாதவர்களால் என்ன செய்ய முடியும்?

இரவுப் பணி செய்யும் பெண்கள் (மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் பணியில் இருப்பவர்கள்) எப்படி குழந்தைக்கு உதவி செய்வார்கள்? "குடும்ப மரம்' (பேமிலி டிரீ) வரைந்து குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பிரிண்ட் எடுத்து ஒட்ட வேண்டும். அதே போல சில பள்ளிகளில் நிறைய வீட்டுப்பாடம் கொடுக்கிறார்கள். சிறு குழந்தைகள் பள்ளியில் படித்தால் போதாதா? வீட்டில் அவர்களை உட்கார்த்தி வைத்து எழுத வைப்பது பெரும்பாடு. வெட்டி, ஒட்டும் வேலை குழந்தைகளால் முடியுமா? அப்போது இது பெரியவர்களுக்கானதா?

ஒரு பள்ளியில் செடியின் தண்டு, வேர், இலை எல்லாவற்றையும் ஒட்டி எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றார்கள். ஒரு செடியைக் கொண்டு வந்து வகுப்பில் காட்டி, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சொல்லிக் கொடுக்க வேண்டும். வெறுமனே இவ்வாறு வேலை கொடுப்பது பெற்றோருக்கா?

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புராஜெக்ட் கொடுத்தால் அவர்கள் தாங்களாகவே செய்து கொள்வார்கள். ஆனாலும் தேவையில்லாமல் அவர்களைப் பாடங்களைப் படிக்க விடாமல் கணினி மையத்திற்கும், கடைக்கும் அலைக்கழிக்கிறார்கள். பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடக்க விருக்கிறது என்றால் புராஜெக்ட் செய்யட்டும். பிள்ளைகளின் அறிவியல் அறிவு வெளிப்படும் என்பதால் அதை வரவேற்கலாம்.

இதில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல குழந்தைகள் மாலையில் பாட்டு வகுப்பு, நடன வகுப்பு, ஹிந்தி வகுப்பு எனப் பறக்கிறார்கள். பெற்றோர் சொல்லும் காரணம் என்னவென்றால், 9-ஆம் வகுப்புக்கு வருவதற்குள் பிள்ளைகள் இது போன்று பலவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பின் மதிப்பெண்களைத் துரத்த வேண்டும்.

அவர்கள் குழந்தைகளா? இயந்திரங்களா? பாவம் சனி, ஞாயிறு நாட்களில் கூட ஓய்வே இல்லை. அத்தனை வகுப்புகளுக்குப் போக வேண்டும். இதில் வியப்பு என்னவென்றால் குழந்தைகளால் அவ்வளவையும் கற்றுக் கொள்ள முடிகிறது என்பது தான்.

இரண்டு ஆண்டுகள் முடங்கிப் போய்விட்ட நிலையில், பள்ளிக்கே போகாமல் இணையவழி வகுப்பில் படித்த குழந்தை இப்போது முதல் வகுப்பு. அதற்கு இப்போது வினா விடைதான் பாடம். அதுவும் இரண்டு வரிகள். ஒன்றும் அர்த்தம் விளங்காமல் அக்குழந்தையால் எப்படிப் படித்து தேர்வு எழுத முடியும்?

பெரும் பள்ளம் ஏற்பட்டு விட்டால், முதலில் அப்பள்ளத்தை மண் கொட்டி மூடி சமன் செய்ய வேண்டும் என்பதைப் போல இரண்டாண்டு இடைவெளியை நிரப்பி விட்டு, பின்னர் நடப்புக் கல்வியாண்டுப் பாடத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ஒரு சிலர் அவ்வாறு செய்கிறார்கள். மற்றவர்கள் இது பெற்றோரின் பொறுப்பு என்று விட்டு விடுகிறார்கள்.

இந்த ஆண்டு வெட்டுவது, ஒட்டுவது போன்ற விளக்கப்படங்களைத் தவிர்த்து விட்டு, அடிப்படைப் பாடங்களைக் கற்றுத் தர வேண்டும். எப்போதுமே பெரியவர்கள் செய்யும் படியான புராஜெக்ட்டுகளை குழந்தைகளுக்குத் தரக்கூடாது. பள்ளிகள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.