அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 19, 2022

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு அரசாணை வெளியீடு



அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 75வது சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அரசு பணியாளர்களுக்கு 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அகவிலைப்படியை 3 சதவீதம் கூடுதல் உயர்வளித்து அரசு ஆணையிடுகிறது. அனுதிக்கப்பட்ட கூடுதல் அகவிலைப்படி 1.7.22 முதல் ரொக்கமாக வழங்கப்படும். 1.1.22 முதல் 30.6.22 வரை அகவிலைப்படியானது தொடர்ந்து 31 சதவீதமாகவே இருக்கும்.

ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவை தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியினை கணக்கிடுகையில் அது 50 காசு அதற்கு மேல் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாக கணக்கிடப்பட வேண்டும். அதுவே, 50 காசுக்கு குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும். இந்த அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி, தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேர பணியாளர்களுக்கும், சில்லரை செலவு நிதியில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கு அனுமதிக்கத்தக்கதாகும். திருத்தப்பட்ட அகவிலைப்படி, பகுதி நேர பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.

இந்த அகவிலைப்படி அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ் வரும் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில்நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும், ஊதிய அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய் துறையில் உள்ள கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர், குழந்தைகள் நல அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், எழுத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கும் பொருந்தும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.