பேராசிரியர் தகுதித் தேர்வில் தோல்வி: இளைஞர் தீக்குளித்து தற்கொலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 17, 2022

பேராசிரியர் தகுதித் தேர்வில் தோல்வி: இளைஞர் தீக்குளித்து தற்கொலை

கல்லூரி பேராசிரியருக்கான தகுதி தேர்வில், 5 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வியுற்ற விரக்தியில் இளைஞர் மணிகண்டன், தனது வீட்டின் மாடி அறையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் முதலியார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான பாலுவின் மகன் மணிகண்டன் (33). இவர் எம்.எஸ்ஸி., எம்.பில்., படித்துள்ளார். முதுநிலை பட்டதாரியான இவர், கல்லூரி பேராசிரியர் பணிக்காக முயற்சி செய்து வந்தார்.

இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில அரசின் தகுதி தேர்விற்கு கடந்த மாதம் (ஜூலை) தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 5 மதிப்பெண் குறைவாக பெற்று இவர் தோல்வி அடைந்ததாகவும், இவரைவிட சுமாராக படித்த பலர் வெற்றி பெற்றதாலும், நிரந்தரமான நல்ல பணி அமையாததால், திருமணமும் கைகூடுவதில் சிக்கல் நீடித்து வந்தாலும், பெரும் மன அழுத்தம் மற்றும் கடும் மன உளைச்சலிலும் கடந்த சில வாரமாக மணிகண்டன் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு அவரது குடும்பத்தினர் வீட்டின் கீழே இருக்க, மணிகண்டன் மன அழுத்தத்தின் உச்சத்தில், மாடியில் உள்ள அறைக்கு சென்று, உள்புறமாக தாளிட்டுக் கொண்டு, மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். வீட்டின் மாடியில் இருந்து புகை வருவது கண்டும், மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டும், அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்து வீட்டினரும், திடுக்கிட்டு மாடிக்கு சென்று பார்த்த போது, மணிகண்டன் உள்புறமாக தாளிடப்பட்ட அறைக்குள், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர். இதன் பேரில், திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சாதிக், காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து மணிகண்டன் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்விற்கு தோல்வியுற்றதால், இளைஞர் மணிகண்டன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேப்பெருமாநல்லூர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியினையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. பலியான மணிகண்டன், இதற்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓராண்டு காலம் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவருக்கு ஒரு மூத்த சகோதரடும், ஒரு மூத்த சகோதரியும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.