ஆசிரியர் தாக்கியதால் தலித் சிறுவன் உயிரிழப்பா? நடந்தது என்ன ? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 15, 2022

ஆசிரியர் தாக்கியதால் தலித் சிறுவன் உயிரிழப்பா? நடந்தது என்ன ?

ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் ஒன்பது வயது தலித் சிறுவன் இறந்ததையடுத்து, சடலத்துடன் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மாணவரின் உறவினர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் வகை செய்யும் யோசனையை அரசுக்கு அனுப்பி வைக்கவும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான முன்மொழிவை அனுப்பவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த சிறுவனின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. குழந்தையின் உடல் ஞாயிற்றுக்கிழமை மதியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தனியார் பள்ளி ஆசிரியர் அடித்ததால் தலித் சிறுவன் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பானையில் இருந்து தண்ணீர் குடித்ததற்காக ஆசிரியர் குழந்தையை அடித்ததாக கூறப்படுகிறது. ப ள்ளி ஆசிரியர் அடித்ததால் காயமுற்ற சிறுவனுக்கு, வெவ்வேறு மருத்துவமனைகளில் 23 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆமதாபாதில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்த சிறுவன் உயிரிழந்தான்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், பானையில் இருந்து தண்ணீர் குடித்ததால் ஆசிரியர் அவனை அடித்தார் என்ற விவரம் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உள்ளூர் காவல்துறை கூறுகிறது.

ஜலோர் சட்டப்பேரவை தொகுதியில் வரும் சைலா தாலுகாவின் சுரானா கிராமத்தில் சரஸ்வதி வித்யாலயா உள்ளது. ஒன்பது வயது தலித் மாணவர் இந்தர் குமார் மேக்வால் இந்த தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பில், படித்து வந்தார். ஜூலை 20ஆம் தேதி, பள்ளியின் இயக்குநரும் ஆசிரியருமான சைல் சிங் மூன்றாம் வகுப்பு மாணவர் இந்தர் குமார் மேக்வாலை அடித்ததாகக் கூறப்படுகிறது.

சுமார் 40 வயதான சைல்சிங் அடித்ததில் 9 வயது இந்தர் குமார் மேக்வாலுக்கு, காது மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டது.

"இந்திரகுமார் மேக்வால், வழக்கம்போல் ஜூலை 20-ம் தேதி பள்ளிக்கு சென்றார். சுமார் 11 மணியளவில் தாகம் எடுத்ததால் பானையில் இருந்து தண்ணீர் குடித்தார். மேல்சாதி ஆசிரியர் சைல் சிங்குக்கு தனியாக இந்தப் பானை வைக்கப்பட்டுள்ளது என்று சிறுவனுக்குத்தெரியாது. தாழ்ந்த சாதியை சேர்ந்த நீ எப்படி என் பானையில் இருந்து தண்ணீரைக் குடிக்கலாம் என்று கேட்டு சைல் சிங் சிறுவனை அடித்துள்ளார். இதன் காரணமாக இந்தர் குமாரின் வலது காது மற்றும் கண்ணில் காயங்கள் ஏற்பட்டன," என்று சிறுவனின் குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்த எழுத்துபூர்வ புகாரில் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, குடும்பத்தினர் இந்தர் குமாரை 23 நாட்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இறுதியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் உதய்பூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து ஆமதாபாதுக்கு மாணவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்குள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்களாக சேர்க்கப்பட்ட அவர் ஆகஸ்ட் 13ஆம் தேதி இறந்தார். அவரது குடும்பத்தில் மூன்று உடன்பிறந்த சகோதரர்களில் இந்திரகுமார் இளையவர்.

இந்த நிலையில், குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, உள்ளூர் ஊடகங்களும், சமூக ஊடகங்களும் இந்த மரணத்திற்கு சரஸ்வதி வித்யாலயா ஆசிரியர் சைல்சிங்தான் காரணம் என்று குற்றம்சாட்டத் தொடங்கின. அவரது குடும்பத்தினர் புகாரின் பேரில் போலீஸார் அந்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

"தண்ணீர் குடித்ததற்காக ஆசிரியர் சைல் சிங் தன்னை அடித்ததாக சிறுவன் கூறினான்," என்று தொலைபேசி மூலம் பிபிசியிடம் பேசிய இந்தர் குமாரின் மாமா மீட்டாலால் மேக்வால் கூறினார்.

அதே நேரத்தில், ஜலோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் வர்தன் அகர்வாலா பிபிசி உடனான தொலைபேசி உரையாடலில், "பானையில் இருந்து தண்ணீர் குடித்த விஷயம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நானே சம்பவ இடத்திற்கு (பள்ளி) சென்றேன். வகுப்பறைக்கு வெளியே ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. அதில் குடிநீர் குழாய்கள் உள்ளன. பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் சில குழந்தைகளிடம் நான் பேசினேன். ஆனால் பானை இல்லை என்று குழந்தைகள் சொன்னார்கள். விஷயம் இப்போது விசாரணையின் கீழ் உள்ளது. நாங்கள் விசாரித்து வருகிறோம்."என்று தெரிவித்தார்.

எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சைல் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். "குழந்தை வகுப்பில் குறும்பு செய்ததால் அவரை அறைந்ததாக இதுவரை நடந்த விசாரணையில் சைல் சிங் கூறியுள்ளார்.ஆனால் தண்ணீர் தொடர்பான விஷயத்தை ஆசிரியர் மறுத்துள்ளார்,"என்று எஸ்பி ஹர்ஷ் வர்தன் அகர்வாலா மேலும் கூறினார். மனு நீதி என்றால் என்ன? அது என்ன சொல்கிறது, ஏன் வந்தது?

சாதிக் கயிறு விவகாரத்தில் மாணவர் கொலை: சிக்கலைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு வழக்குகள் – தீர்வு என்ன? கன்னத்தில் அறைந்ததால் குழந்தையின் நிலை எப்படி இவ்வளவு மோசமாகும் என்று எஸ்பி ஹர்ஷ் வர்தன் அகர்வாலாவிடம் வினவப்பட்டபோது, "குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றார்.

இருப்பினும், உள்ளூர் பத்திரிகையாளர் ஓம் பிரகாஷ், மாணவர் பானையில் இருந்து தண்ணீரைக் குடித்ததால்தான் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறுகிறார். இந்தர் குமாரின் தந்தைக்கும் ஆசிரியர் சைல் சிங்குக்கும் இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப்பும் வெளிவந்துள்ளது. அதில் அவர் சிகிச்சைக்கு உதவுவது குறித்தும் பேசியிருக்கிறார். எனினும், இந்த உரையாடலில் இருந்து தாக்கப்பட்டதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

ஆகஸ்ட் 13ஆம் தேதி மாலையில் குழந்தையின் இரண்டு வீடியோக்கள் வெளிவந்தன. குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. குடும்பத்தினர் மாணவரிடம் பேச முயன்றும் அவரால் எதுவும் கூற முடியவில்லை.

மாணவர் கண்களை மூடிக்கொண்டு வலியில் புலம்புகிறார். மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது

ஆம்புலன்சில் இருந்த குடும்பத்தினர் இந்த வீடியோ எடுத்துள்ளனர்.

மாணவரின் மூக்கில் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது. வலது கண் வீங்கியிருக்கிறது. குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் பேச முயல்கிறார்கள், ஆனால் ஒன்பது வயது மாணவர் வலியால் துடிக்கிறார், அவரால் எதுவும் பேச முடியவில்லை.

மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் குடும்ப உறுப்பினர்கள் மாணவரிடம் அவரை அடித்தது யார் என்று கேட்கிறார்கள். இந்த வீடியோவிலும் மாணவர் கண்களை மூடியபடி படுத்துள்ளார். படுக்கையில் மருந்துகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த வீடியோவில் அடித்தது யார், அறைந்தது யார் என்று குடும்பத்தினர் கேட்கின்றனர். மாணவர் அதற்கு பதில் சொல்லவில்லை. பலரது பெயர்களை சொல்லி அடித்தது யார் என்று கேட்கின்றனர். சைல் சிங் மாஸ்டர் அறைந்தாரா, யார் அடித்தது என்று உறவினர்கள் கேட்க, மாணவன் லேசாக கழுத்தை மட்டும் அசைக்கிறான்.

எங்கே அடித்தார் என்று உறவினர்கள் கேட்டபோது, மாணவன் கண்களை மூடிய நிலையிலேயே தன் விரல்களால் காதின் பின்புறத்தைக் காட்டுகிறான்.

மாணவர் இந்தர் குமார் மேக்வாலின் தாய்வழி மாமா மீட்டாலால் மேக்வால், குழந்தையின் காதில் வலி இருப்பதாக பிபிசியிடம் கூறினார். சிகிச்சைக்காக சிறுவன் பகோடா, பீன்மால், டீசா, மெஹ்சானா, உதய்பூர் மற்றும் இறுதியாக அகமதாபாத்திற்கும் கொண்டு செல்லப்பட்டான். அங்கு இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 13 அன்று சிறுவன் காலமானான்.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கொலை வழக்கு

ஜூலை 20 ஆம் தேதி சம்பவம் நடந்து 23 நாட்களுக்குப் பிறகு, குடும்ப உறுப்பினர்களின் புகாரின் பேரில் சைலா காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியர் சைல் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை எடுக்கப்பட்ட காவல்துறை நடவடிக்கை குறித்த தகவலை அளித்த ஜலோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஹர்ஷ் வர்தன் அகர்வாலா, "குற்றம் சாட்டப்பட்டவர் மீது மிகக் கடுமையான பிரிவுகள் விதிக்கப்பட்டுள்ளன. IPC மற்றும் SC ST சட்டத்தின் பிரிவு 302 (கொலை) கீழ் FIR பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் சைல் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார்.

"இந்த சம்பவம் ஜூலை 20-ம் தேதி நடந்துள்ளது. குழந்தை ஆகஸ்ட் 13-ம் தேதி இறந்தது. இந்த விஷயம் ஆகஸ்ட் 11-ம் தேதி எங்களுக்குத் தெரிந்தது. குடும்பத்தினர் புகார் தெரிவிக்கவில்லை. சாயலா எஸ்.ஹெச்.ஓ. தான் புகார் அளிப்பதாக அகமதாபாத் மருத்துவமனையில் இருந்த சிறுவனின் தந்தையிடம் கூறினார். அப்போது தானே சென்று புகார் செய்வதாக சிறுவனின் தந்தை சொன்னார்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாணவர் உயிரிழந்ததையடுத்து மாவட்ட காவல்துறை உஷார் நிலையில் உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு 8 மணி முதல் இணையதள சேவையை மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் தெரிவித்த கருத்துக்கள்

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆகஸ்ட் 16ஆம் தேதி மனு அளிக்கப்படும்.

இந்த சம்பவத்திற்கு முதல்வர் அஷோக் கெய்லாட் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இதை' கேஸ் ஆஃபீசர் திட்டத்தின்' கீழ் எடுத்துக்கொள்வதற்கு முதல்வர் கெலாட் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வேகமாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை விரைவில் தண்டிக்க இது வகை செய்யும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ராஜஸ்தானில் இதுபோன்ற வேதனையளிக்கும் சாதிவெறி சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டே இருக்கின்றன," என்று அவர் கூறியுள்ளார்.

"ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசு, குறிப்பாக தலித்துகள், பழங்குடியினர் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களின் உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாக்கத் தவறிவிட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த மூன்றரை ஆண்டுகளாக ராஜஸ்தானில் தலித் வன்கொடுமை சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருகின்றன. அரசும், முதல்வரும் பலவீனமாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன," என்று கூறியுள்ளார். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் யாதவ், இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். "இது மனிதாபிமானத்திற்கு ஒரு களங்கம். ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்,"என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.