வகுப்பில் சரளமான தமிழில் பேசும் வீடியோவில் மாணவி ஸ்ரீமதியா? விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 25, 2022

வகுப்பில் சரளமான தமிழில் பேசும் வீடியோவில் மாணவி ஸ்ரீமதியா? விளக்கம்

மாணவி ஒருவர் சரளமாக தமிழ் பேசும் வீடியோவும், அவர் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி தான் எனும் தகவலும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் க்ரைம் போலீஸாரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - சென்னை மூன்றாமிடம்

இந்நிலையில் மாணவி ஒருவர் சரளமாக தமிழ் பேசும் வீடியோவும், அவர் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி தான் எனும் தகவலும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆனால், அப்படி பகிரப்படும் வீடியோ முற்றிலும் தவறானது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொன்னுசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில், ”மாணவி ஒருவர் சரளமாக தமிழில் பேசும் காணொளி பதிவோடு, அவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி என்கிற தவறான தகவல் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அவ்வாறு பகிரப்படும் காணொளி பதிவு முற்றிலும் தவறானதாகும். தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் காணொளியில் அன்னைத் தமிழில் அழகாக பேசும் அந்த மாணவி கோவை மாவட்டம் சிறுவனபுரி கந்தசாமி சுவாமிகள் பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வரும் செல்வி பவதாரிணி குணசேகரன் என்பதும், அவர் ஓராண்டுக்கு முன் பேசியதை தற்போது மாணவி ஸ்ரீமதியோடு ஒப்பிட்டு வைரலாக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | நீட் விவகாரத்தில் உண்மையைமறைக்கிறது திமுக

இது போன்ற தகவல்களின் உண்மை தன்மை குறித்து ஆராயாமல் கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்வது தவறான செயல் மட்டுமின்றி நம் மீது காவல்துறையினர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நாமே வழி ஏற்படுத்தி கொடுத்ததாகி விடுவதோடு, நாளை நாம் உண்மையான தகவல்களை பகிர்ந்தாலும் கூட அது அனைவராலும் சந்தேக கண்ணோட்டத்தோடு மட்டும் தான் பார்க்கப்படும் என்பதை இந்த தருணத்தில் கவனத்தில் கொள்ளவும்.

அத்துடன் தவறான அந்த பகிர்வு எவருக்கும் எந்த ஒரு பலனையும் தராமல் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகி “வதந்”தீ”களை பரப்புவதில் சமூக வலைதளவாசிகளுக்கு நிகர் யாருமில்லை” என்கிற கருத்தினை இச்சமூகத்தில் நிலை பெறச் செய்து விடும் என்பதை அனைவரும் மனதில் கொண்டு செயலாற்றிட வேண்டும். இவ்வாறு பொன்னுசாமி தனது ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.