'அல்பெலியன்' நிகழ்வால் பூமி குளிருது. . . நோய் வருது. . . என அடித்துவிடப்பட்ட அண்டப்புளுகு! அறிவியல் கூறும் உண்மை என்ன? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 5, 2022

'அல்பெலியன்' நிகழ்வால் பூமி குளிருது. . . நோய் வருது. . . என அடித்துவிடப்பட்ட அண்டப்புளுகு! அறிவியல் கூறும் உண்மை என்ன?

தந்தி, பாலிமர், கலைஞர், சத்தியம், தினமலர், மாலைமுரசு என முன்னணிச் செய்தி நிறுவன செய்தி ஆசிரியர்களின் அடிப்படை அறிவியல் புரிதலற்ற தன்மையால் ஒரு வதந்தி காட்டுத்தீயாகக் கடந்த சில தினங்களாகப் பரவி வருகிறது.

அதாவது, அல்பெலியன் நிகழ்வு 4-ந்தேதி காலை 5.27 மணிக்கு தொடங்குதாம். . . பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 9 கோடி கி.மீ-லயிருந்து 66% அதிகரிச்சு 15.20 கோடி கி.மீ தூரமா மாறுதாம். . . பூமீல குளிரு கூடிருமாம். . . என்னென்னமோ நோயெல்லாம் வருமாம். . . . என்று ஏகத்துக்குப் புளுகப்பட்டுள்ளது. அண்டப்புளுகு ஆகாசப் புளுகுனு சொல்லுவோம்ல அது 100% இதற்குப் பொருந்தும். ஏனெனில் இது அண்டம் & ஆகாயம் பற்றிய புளுகு (பொய்) தான்.

உண்மை என்னவென்று அறிய. . . நாம் கற்ற அண்ட அறிவு-இயலைச் சற்றே நினைவூட்டிக் கொள்வோம் வாருங்கள்.

தோராயமாக நீள் வட்டம் போன்று நமக்குத் தோன்றும் ஒரு வட்டப் பாதையில் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. அதென்ன 'தோராயமாக நமக்குத் தோன்றும்' என்றால். . . ஒரு கிரிக்கெட் மைதானத்தை எறும்பு பார்க்கும் பார்வைக்கும் நாம் பார்க்கும் பார்வைக்கும் உள்ள காட்சி வேறுபாட்டைப் போன்றதே, பூமியின் உண்மையான சுற்றுவட்டப் பாதைக்கும் நமது பார்வையிலான சுற்றுவட்டப் பாதைக்கும் உள்ள வேறுபாடு. இந்த சுற்றுவட்டப் பாதையின் சரியான மையப்புள்ளியில் சூரியன் இல்லை. சுற்றுவட்டப் பாதையின் ஒரு முனைக்கும் சூரியனுக்கும் உள்ள குறைந்தபட்ச தூரம் 14.7 கோடி கி.மீ (9.1 கோடி மைல்). இந்த குறைந்தபட்ச தூரமுள்ள முனைக்கு Perihelion - பெரிகீலியன் என்று பெயர். இந்த முனைக்கு பூமி வருவது பெரிகீலியன் நிகழ்வு.

அதேபோன்று, சுற்றுவட்டப் பாதையின் ஒரு முனைக்கும் சூரியனுக்கும் உள்ள அதிகபட்ச தூரம் 15.2 கோடி கி.மீ (9.4 கோடி மைல்). இந்த அதிகபட்ச தூரமுள்ள முனைக்கு Aphelion - அஃபிலியன் என்று பெயர். இந்த முனைக்கு பூமி வருவது அஃபிலியன் நிகழ்வு. இந்த சொல் கிரேக்க மொழியில் வெளிப்புற தூரத்தைக் குறிக்கும் apo என்ற சொல்லில் இருந்து வந்தது.

(இந்தக் குறைந்தபட்ச & அதிகபட்ச தூரங்களை வைத்தே நாம் இந்தச் சுற்றுவட்டப்பாதையை நீள்வட்டமாக அனுமானித்துக் கொண்டுள்ளோம்)

செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது போல 'அல்பெலியன்' என்ற சொல்லே பூமியின் நீள்வட்டப்பாதை அறிவியலில் இல்லை. மேலும், அஃபிலியன் நிகழ்வு என்ற பூமி சூரியனுக்குத் தூரமாகும் நிகழ்வு ஆண்டுதோறும் வழக்கமாக நிகழக்கூடியதே. இந்நிகழ்வு சூலை 3 / 4-ஆம் தேதிகளில் நிகழும். அதேபோன்று சூரியனுக்கு அருகில் செல்லும் பெரிகீலியன் நிகழ்வு ஆண்டுதோறும் சனவரி 3 / 4-ஆம் தேதிகளில் நிகழும்.

அதாவது சூலை 3 / 4-ஆம் தேதிகளில் 15.2 கோடி கி.மீ (9.4 கோடி மைல்) தூரத்தில் இருக்கும் பூமி சனவரி 3 / 4-ஆம் தேதிகளில் 14.7 கோடி கி.மீ (9.1 கோடி மைல்) தூரத்தில் இருக்கும்.

இந்தத் தூரக் கணக்கீட்டில் உள்ளூர் புரிதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட கிலோமீட்டர் & மைல் அளவுகளைத் தவறாகப் புரிந்து கொண்டு குறைந்த தூரத்தின் மைல் அளவையும் (9.1) அதிக தூரத்தின் கிலோமீட்டர் அளவையும் (15.2) தவறாக ஒப்பிட்டு சூரியனில் இருந்து 66% அதிக தூரத்துல பூமி இருக்கிறது என்று அந்த வதந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புரீலையோ. . . எல மக்கா. . . கி.மீ-ல சொன்னா கி.மீ-ல தாம்ல கடைசிவர சொல்லனும். ஏதோ ஒரு செத்தமூதி மொதல கி.மீ-லயும் பெறவு மைல்-லயும் சொல்லி அம்புட்டுப்பேரையும் கோட்டிக்காரனாக்க பாத்துருக்கு போல. அதுல ஏமாந்துபோன ஏதோ ஒரு நியுஸ் சேனல் செய்தியப்போட பெறவு அதையே மத்த பக்கிகளும் ஈயடுச்சான் காப்பீ அடிச்சுட்டானுவ.

சரி. இப்ப அந்த அல்பெலியன் என்பதும் பொய்; 66% அதிக தூரம் என்பதும் பொய்யென புரிஞ்சுக்கிட்டிருப்பீங்கனு நம்புறேன். அந்த பூமி குளிர்ர மேட்டர இனி பார்ப்போம். சூரியனுக்கு அருகில் இருக்கும் போது பூமி சூடா இருக்கும்; தூரமா போனா குளிரா இருக்கும் என்பதுதான் சரியென்றால், மேலே பார்த்த நீள்வட்ட பாதைச் சுற்றில் நமக்கு சனவரி கோடைக்காலமாகவும் சூலை குளிர்காலமாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியா இருக்கு?

பூமியின் வடதுருவம் (/ தென்துருவம்) செங்குத்தாக 90°-ல் இல்லை. 23.5° சாய்ந்த நிலையில் தான் உள்ளது. அதாவது ஆப்பிள் பழத்தை தரையில் வைத்தால் காம்பு செங்குத்தாக இருக்கும். (அந்தக் காம்புதான் வடதுருவம்னு வச்சுக்குவோம்.) அந்தக் காம்பைப்பிடித்து 23.5° வலது பக்கமாக சாய்த்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் பூமி சாய்வாக உள்ளது. இந்த சாய்ந்த பூமியின் வட அரைக்கோளத்தில்தான் நாம் இருக்கிறோம்.

இந்தச் சாய்ந்தபூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வரும் போது குறைந்த தூரமான பெரிகீலியன் முனையை சனவரி 3-ஆம் தேதி அடைகையில் சூரியனின் கதிர்கள் பூமியின் தென் அரைக் கோளத்தில்தான் செங்குத்தாகப்படும். எனவே அம்மாதத்தை ஒட்டிய முன்பின் மாதங்களில் தென் அரைக்கோளத்தில் கோடைகாலமாக இருக்கிறது. வட அரைக்கோளத்தில் உள்ள நம்மீது சூரியக்கதிர்கள் சாய்வாக விழுவதால் நமக்குக் குளிர்காலமாக உள்ளது.

அதேபோன்று, அதிக தூரமான அஃபிலியன் முனையை சூலை 3-ஆம் தேதி அடைகையில் சூரியனின் கதிர்கள் நாம் உள்ள பூமியின் வட அரைக் கோளத்தில்தான் செங்குத்தாகப்படும். எனவே அம்மாதத்தை ஒட்டிய முன்பின் மாதங்களில் வட அரைக்கோளத்தில் கோடைகாலமாக இருக்கிறது. அப்பொழுது தென் அரைக்கோளத்தில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழுவதால் அங்கு குளிர்காலமாக இருக்கிறது.

குறிப்பாக, அதிக தூரமான அஃபிலியன் முனையை நெருங்கும் ஏப்ரல் & மே மாதங்களில் இந்திய நிலப்பரப்பின் மீது சூரியக் கதிர்கள் அதிக செங்குத்தாக விழுவதால் கோடை காலமாகவும், குறைந்த தூரமான பெரிகீலியன் முனையை நெருங்கும் நவம்பர் & டிசம்பர் மாதங்களில் சூரியக் கதிர்கள் அதிகம் சாய்வாக விழுவதால் குளிர்காலமாகவும் உள்ளது. அதாவுதங் கண்ணு. . . சூரியனுக்குப் பக்கத்தால இருக்றப்போ அம்மூர்ல வின்ட்ராவும். . . . சூரியனுக்கு அக்கட்டால எட்டிப்போம்போது அம்மூர்ல சம்மராவும் இருக்குதுங். ஒட்டுக்கா சொல்லோனும்னாங். . . கெறகத்த. . . தூரத்துக்கும் குளிருக்கும் ஒரு லிங்க்குங் கிடையாதுங். . . அம்புட்டு காலநிலைக்கும் பூமி சாய்வா இருக்கறதுதான் காரணமாக்குங்...

மேலும், சாய்வாக உள்ள பூமியில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக மற்றும் அதிகச் சாய்வாகப்படும் காலங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சூரியக் கதிர்களின் வீச்சைப் பொறுத்து வசந்த காலம் & இலையுதிர் காலம் வருகிறது. எனவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரமல்ல, பூமியின் சாய்வு நிலையே பருவகாலத்தைத் தீர்மானிக்கிறது.

இப்பருவகாலங்கள் சீராக இருப்பதை ஓசோன் படலம் சூரியக் கதிர்வீச்சின் வடிகட்டியாக இருந்து உறுதி செய்கிறது. ஓசோன் படலத்தையே நமது அன்றாடப் பயன்பாடுகள் பாதிப்படையச் செய்யத் தொடங்கிவிட்டதால்தான் பருவகாலத்திற்குத் தொடர்பின்றி சூரியனின் அதீத வெப்பத்தினைத் தற்போதும் அனுபவித்து வருகிறோம்.

சற்றே நீண்ட பதிவுதான். இறுதிவரை வாசித்தமைக்கு நன்றி. இதிலும் குழப்பமிருப்பின் இணைப்பிலுள்ள படத்தைப் பார்த்தால் தெளிவாகுமென நம்புகிறேன்.

நன்றி!

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.