பணி நியமனம் வேண்டி போராடும் ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் ஆதரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 1, 2022

பணி நியமனம் வேண்டி போராடும் ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் ஆதரவு

பணி நியமனம் வேண்டி போராடும் ஆசிரியர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்ய வேண்டும்; கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பணி நியமனம் தொடர்பான திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண். 177ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; தற்போது நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் மற்றும் ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பு தளர்வு பணி நியமனம் செய்ய வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர்.

3 நாட்கள் அனுமதி இருந்தும் 2ம் நாளான நேற்றே போராட்டத்தை முடக்கும் பணியை காவல்துறை துவக்கியது. இன்று அவர்களை அல்லல்படுத்தி ஒவ்வொருவரையும் அவர்களின் வீடுகளுக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை பேருந்து நிலையத்திற்கும் காவல்துறை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தது. இதனை தொடர்ந்து ஆசிரியர்கள், போராட்ட குழுவினர் இன்று மாநில தலைமையகத்தில் நம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் அவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தனர். மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே அவர்களின் கோரிக்கைகள் பக்கம் நிற்பதை சுட்டிக்காட்டி தொடர்ந்து எங்களின் ஆதரவை வழங்குவோம் என்று தலைவர் கமல் ஹாசன் உறுதி தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் தலைவருடன் மாநில துணைத் தலைவர் A.G.மௌரியா, மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், முரளி அப்பாஸ், நாகராஜன், மூர்த்தி, வினோத் குமார், சஜீஷ், பிரகாஷினி, மற்றும் மாவட்ட செயலாளர்கள் மாறன், ஆவடி பாபு, கோமகன், தேசிங்கு ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.