1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் : தொடக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 13, 2022

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் : தொடக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு சாதனையையொட்டி 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடந்த மே மாதம் அறிவித்தார். அதில் ஒன்று தான் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமானது. இது குறித்து பேசிய அவர், 'அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். நகர பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தீட்டி இருக்கிறோம்,' என்றார். இந்த நிலையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக 15 மாவட்ட அரசு பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில் பரிசுத்தமான முறையில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் காலை 5:30-7:45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும், காலை 8:15-8:45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.