முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுகம்: 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 27, 2022

முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுகம்: 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்

முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுகம்: 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்

தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த ஒரு லட்சத்து 14,095 மாணவா்கள் பயன்பெறுவா்.

இது தொடா்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசு உத்தரவு:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சமூக நலத் துறை இயக்குநா் அனுப்பியிய கடிதத்தில், ‘மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 14,095 மாணவா்களுக்கு ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தலாம்’ என கேட்டுக் கொண்டிருந்தாா். இத்திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடப்படுகிறது. முன்னோடித் திட்டம்: நாட்டிலேயே முன்னோடியாக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

எந்தெந்த இடங்கள்?: சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளின் 5,941 மாணவா்களும், திருச்சி, காஞ்சிபுரம், கடலூா், தஞ்சாவூா், கும்பகோணம், வேலூா், திருவள்ளூா், தூத்துக்குடி, மதுரை, சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, கன்னியாகுமரி, கோயம்புத்தூா் மாநகராட்சிகளில் 381 பள்ளிகளின் 37,740 மாணவா்களும் விழுப்புரம், திண்டிவனம், புதுக்கோட்டை, பெரம்பலூா், காட்டாங்கொளத்தூா், கூடுவாஞ்சேரி, நாமக்கல், திருச்செங்கோடு, திருவண்ணாமலை, திருவத்திபுரம் (செய்யாறு), ஜெயங்கொண்டம், ஆற்காடு, ஆம்பூா், வாணியம்பாடி, மயிலாடுதுறை, சீா்காழி, நாகப்பட்டினம், பரமக்குடி, காரைக்குடி, கோவில்பட்டி, மன்னாா்குடி, மேட்டுப்பாளையம், மதுக்கரை நகராட்சிகளில் 163 பள்ளிகளின் 17,427 மாணவா்களும் காலை உணவு பெறுவாா்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, தருமபுரி பாலக்கோடு, கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், திருப்பூா் மாவட்டம் குண்டடம், சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா், தேனி மாவட்டம் மயிலாடும்பாறை, விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி, திருச்சி துறையூா், தென்காசி மேலநீலிதநல்லூா், குருவிகுளம் ஆகிய வட்டங்களில் 728 பள்ளிகளின் 42,826 பேரும் மலைப் பகுதிகளான கல்வராயன்மலை, கொல்லிமலை, ஜவ்வாதுமலை, கொடைக்கானல், தாளவாடி, கூடலூா் வட்டங்களில் 237 பள்ளிகளின் 10,161 பேருக்கும் காலை உணவு பெறுவாா்கள். சிறுதானிய உணவுகள்

திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை ரவை கிச்சடியில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும். புதன்கிழமை ரவை அல்லது வெண்பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரி வழங்கப்படும். காய்கறி சாம்பாா் தினமும் அளிக்கப்படும்.

காலை உணவுக்கான மூலப் பொருள் ஒரு குழந்தைக்கு 50 கிராம் அளவில் இருக்க வேண்டும். அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்களை பயன்படுத்தலாம். ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாள்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம்.

உள்ளூரில் சமைக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மசாலா பொருள்கள் தரமானதாக, சுத்தமாக இருக்க வேண்டும்.

1920-இல் உணவுத் திட்டம்...

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 102 ஆண்டுகளுக்கு முன்பாகவே மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அப்போதைய சென்னை மாநகராட்சி நிா்வாகம் செயல்படுத்தியுள்ளது.

இது தொடா்பான தமிழக அரசின் உத்தரவு: ஏழை, எளிய சமூகக் குழந்தைகளின் காலடிகள் கல்விச் சாலையை எட்ட முடியவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பள்ளியில் உணவளிக்கும் திட்டத்தை முன்மொழிந்து நிறைவேற்றியது, அப்போதைய சென்னை மாநகராட்சி நிா்வாகம். மன்றத்தின் தலைவராக இருந்த சா்.பிட்டி தியாகராயா் தலைமையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. 1920 செப்.16-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு ஒரு அணாவுக்கு மிகாமல் செலவு செய்யப்படும் வகையில் இந்தத் திட்டம் தொடக்கப்பட்டது. பின்னா், சேத்துப்பட்டு, மீா்சாகிப்பேட்டை பகுதிகளில் இயங்கிய மேலும் நான்கு பள்ளிகளுக்கு மதிய உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன் பயனாக, ஐந்து பள்ளிகளில் மாணவா் சோ்க்கையானது 811-லிருந்து ஒரு சில ஆண்டுகளிலேயே 1,671 ஆக உயா்ந்தது.

1957-இல் மதிய உணவுத் திட்டத்தை முன்னாள் முதல்வா் காமராஜா் தொடக்கி வைத்தாா். இதற்காக ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.18 என்ற அளவில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. முதல்வராக இருந்த எம்.ஜி.ஆா். 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு அறிவித்த சத்துணவுத் திட்டம் 1982 ஜூலை 1-இல் திருச்சி மாவட்டம் பாப்பாகுறிச்சியில் தொடக்கப்பட்டது. சத்துணவுடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முட்டை வழங்குவதை 1989-இல் அறிமுகப்படுத்தினாா், முன்னாள் முதல்வா் கருணாநிதி. பின்னா் வாரத்துக்கு ஒருமுறை முட்டை வழங்கப்பட்டது. சட்டப் பேரவையில் 1998-ஜூலை 23-இல் நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்பின், 2008-ஆம் ஆண்டில் சத்துணவுடன் வாரம் 5 முறை முட்டைகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மதிய உணவுத் திட்டத்தைத் தொடா்ந்து, காலை உணவு அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

முதல்வர் பெருமிதம்

காலை உணவுத் திட்டம், குழந்தைகளின் வாழ்வில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கான கோப்பில் கையெழுத்திட்ட போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சமூகநீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டம்தான் காலை உணவுத் திட்டம். லட்சக்கணக்கான மாணவர்களின் மனம் குளிர காரணமாகிறேன் என்பதே எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி. திராவிட இயக்கக் கொள்கைகளில் உணர்வுப்பூர்வமாகத் தோய்ந்து போன எனக்கு, ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் ஒரு கனவுத் திட்டம். முதல்வராகப் பெருமிதம் தரும் திட்டம். வெற்றியை உறுதிப்படுத்துங்கள்: இத்திட்டம் தனது நோக்கத்தில் மகத்தான வெற்றி அடைவதை மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டி உறுதிப்படுத்த வேண்டும். மக்களுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கித் தருவதும், கல்வியைப் பரவலாக்குவதன் மூலம் அதிகாரத்தில் அடித்தட்டு மக்களை அமர வைப்பதும் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள். அந்தக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை திராவிட இயக்கம் கண்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த முன்னோடி திட்டத்தின் வெற்றி நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும். பிற மாநிலங்களிலும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டம் பின்பற்றப்படும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.