தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 1, 2022

தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிலும் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், நடப்பு கல்வி ஆண்டில் பொது தேர்வுகள் நேற்று முடிவுக்கு வந்தன. கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும், வரும் 13ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தனியார் நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.அதேபோல, புதிய கல்வி ஆண்டில் அடுத்த வகுப்புக்கு முன்னேறி செல்லும் மாணவர்களுக்கான, தேர்ச்சி பட்டியல் வழங்கும் பணியும் துவங்கியுள்ளது. அறிவுறுத்தல்

மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணங்களை தனியார் பள்ளிகள் வசூலிக்க துவங்கி உள்ளன.இதில், சில மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், கொரோனா காலத்துக்கு முன்பிருந்த பழைய கட்டணப்படியே, புதிய கல்வி ஆண்டுக்கும் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுப்படி, பள்ளிகளில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு நிலுவையில் உள்ளது.

தற்போதைய நிலையில், தனிமனித பொருளாதாரம் மற்றும் வருவாய் அதிகரிக்காத நிலையில், பல பள்ளிகள் மீண்டும் பழைய கட்டணத்தையே செலுத்துமாறு, கட்டாயப்படுத்துவதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.இந்நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் இயக்குனரகம் சார்பில், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.அதில், கூறியிருப்பதாவது:எந்த தனியார் பள்ளியும், கொரோனாவுக்கு முந்தைய கல்வி கட்டணத்தின்படி, புதிய கல்வி ஆண்டில் கட்டணம் வசூலிக்க கூடாது. நடவடிக்கை

புதிய மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை, கட்டட நிதி, அறக்கட்டளை நிதி என, எந்த பெயர்களிலும் மறைமுக கட்டணம் வசூலிக்க கூடாது.பெரும்பாலான பெற்றோர், இன்னும் கடன் சுமை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளாத நிலையில், 75 சதவீத கட்டணத்தை மட்டுமே, பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.

அரசின் உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.