சாதி பெயரை சொல்லி அவமதிப்பு 6ம் வகுப்பு மாணவனை நெருப்பில் தள்ளி கொல்ல முயற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 10, 2022

சாதி பெயரை சொல்லி அவமதிப்பு 6ம் வகுப்பு மாணவனை நெருப்பில் தள்ளி கொல்ல முயற்சி

திண்டிவனம் அருகே 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவனை நெருப்பில் தள்ளி கொல்ல முயன்றதாக, போலீசில் சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி அண்ணாநகர் குளக்கரை தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் (39). பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர்.

இவரது மகன் சுந்தர்ராஜ் (11), அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு சுந்தர்ராஜ் பள்ளிக்கு போகும்போது சாதி பெயரை சொல்லி அழைத்து, அவமானம் செய்துள்ளனர். இதுதொடர்பாக சுந்தர்ராஜ் அவரது தந்தையிடம் தெரிவித்ததன் பேரில், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்து சுந்தரராஜ் தனது பாட்டி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கருமகாரிய கொட்டகை அருகே நின்றிருந்த 3 மாணவர்கள், சிறுவனை, இங்க வாடா என அழைத்து அங்கே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் சிறுவனை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நெருப்பில் விழுந்து படுகாயமடைந்த சுந்தர்ராஜை அங்கிருந்த மூன்று பேரில் இரண்டு மாணவர்கள் அழைத்துச்சென்று வீட்டில் விட்டுள்ளனர். பின்னர் சிறுவனின் தாய் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிறுவனின் உடலில் அதிக அளவில் தீக்காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் மணம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கன்னியப்பன் தனது மகனை நெருப்பில் தள்ளி கொல்ல முயன்றதாக அளித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.