பொது தேர்வு எழுத 27 லட்சம் பேருக்கு 7,000 மையங்கள் அமைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 5, 2022

பொது தேர்வு எழுத 27 லட்சம் பேருக்கு 7,000 மையங்கள் அமைப்பு

தமிழகத்தில் மே 5ல் துவங்க உள்ள பொதுத் தேர்வில் 27 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 10ம் வகுப்புக்கு 4,000; பிளஸ் 2வுக்கு 3,000 மையங்கள் அமைக்கப்படுவதாக, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5; பத்தாம் வகுப்புக்கு மே 6; பிளஸ் 1க்கு மே 10ல் பொது தேர்வுகள் துவங்கி, மே 31 வரை நடக்க உள்ளன. காலை 10:00 மணி முதல் பகல் 1:15 மணி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவ - மாணவியரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. * பத்தாம் வகுப்பில், 12 ஆயிரத்து 713 பள்ளிகளை சேர்ந்த, 4.69 லட்சம் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்பட, 9.55 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்

* பிளஸ் 2வில் 7,506 பள்ளிகளை சேர்ந்த 4.39 லட்சம் பெண்கள் உள்பட, 8.37 லட்சம் பேர்; பிளஸ் 1ல், 7,534 பள்ளிகளை சேர்ந்த இரண்டு திருநங்கையர், 4.50 லட்சம் பெண்கள் உள்பட, 8.84 லட்சம் பேரும் பொதுத் தேர்வு எழுத உள்ளனர்

* தனி தேர்வர்களை பொறுத்தவரை, பத்தாம் வகுப்பில், 30 ஆயிரத்து 890; பிளஸ் 2ல் 28 ஆயிரத்து 380; பிளஸ் 1வில் 5,717 பேர் என மொத்தம், 64 ஆயிரத்து 987 பேர் பொது தேர்வை எழுத உள்ளனர்

* சிறைகளில் உள்ள 413 கைதிகளும் பொது தேர்வு எழுத உள்ளனர். அவர்களில், 242 பேர் பத்தாம் வகுப்பு; 73 பேர் பிளஸ் 2; 98 பேர் பிளஸ் 1 தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.இதன்படி, மாநிலம் முழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், 13.58 லட்சம் மாணவியர் மற்றும் மூன்று திருநங்கையர் உள்பட, 26.76 லட்சம் மாணவ - மாணவியர் பொது தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்கள்

மாநிலம் முழுதும் பத்தாம் வகுப்புக்கு 3,936; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தலா 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க, 1,241 ஆசிரியர்கள் நிலையான கண்காணிப்பு படையிலும்; 3,050 ஆசிரியர்கள் பறக்கும் படையிலும் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

இவர்கள் தவிர, ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஒரு கண்காணிப்பாளர் என, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொது தேர்வு முடிந்து, அனைத்து தேர்வு மையங்களிலும் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, 118 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.

தேர்வுக்குப் பின், பத்தாம் வகுப்புக்கு 86 மையங்களிலும், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு தலா 80 மையங்களிலும் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. பத்தாம் வகுப்புக்கு, ஜூன், 17; பிளஸ் 2வுக்கு, ஜூன் 23; பிளஸ் 1க்கு ஜூலை 7ல் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட, அரசு தேர்வு துறை திட்டமிட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.