பொங்கல் பண்டிகை 2026...வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம் இது தான் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 13, 2026

பொங்கல் பண்டிகை 2026...வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம் இது தான்



Pongal 2026 Auspicious Time For Making Pongal And Worship Method பொங்கல் பண்டிகை 2026...வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம் இது தான்

தமிழர்களின் பாரம்பரிய தொழிலான விவசாயத்தையும், அதற்கு உதவி செய்யும் இயற்கை, சூரியன் ஆகியவற்றிற்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். இந்த பொங்கல் பண்டிகையன்று வீடுகளில் பொங்கல் வைக்க நல்ல நேரம் எது, பொங்கல் பண்டிகையன்று வீட்டில் எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும், அறுவடைத் திருவிழாவாகவும் போற்றப்படும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து தமிழர்களாலும் மிகுந்த உற்சாகத்துடனும் பாரம்பரியத்துடனும் கொண்டாடுவது வழக்கம். தை மாதத்தின் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து, வாசலில் வண்ண கோலமிட்டும், வீட்டை அலங்கரித்து, வீடுகள் தோறும் தைத்திருநாளை வரவேற்பது வழக்கம். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள். அப்படி அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றம் தரக் கூடிய நாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புதிய பானையில் புது அரிசியிட்டு, பால் பொங்கி வரும் வேளையில் "பொங்கலோ பொங்கல்!" என்று குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து முழக்கமிடுவார்கள். பொங்கி வந்த பொங்கலைச் சூரிய பகவானுக்குப் படைத்து, இப்பூமி செழிக்கக் காரணமான இயற்கைக்கும் கதிரவனுக்கும் மக்கள் நன்றி செலுத்துவார்கள். கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் களைகட்டும்.

வாழ்க்கையில் ஆரோக்கியம், முன்னேற்றம், வளம் ஆகியவற்றை தரும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் என இரண்டு விதமான பொங்கல்கள் வைத்து சிலர் வழிபடுவார்கள். இன்னும் சிலர் பொங்கலுடன், பலவிதமான காய்கறிகள் சேர்த்து சமைத்து படையல் இடுவார்கள்.

இஞ்சி, மஞ்சள், கரும்பு, வாழை, தானிய வகைகள் ஆகியவற்றையும் சூரிய பகவானுக்கு படைத்து, " இனி வரும் ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும். மண் செழிக்க வேண்டும். அனைவரும் பசி இல்லாத செழிப்பான வாழ்க்கை வாழ அருள் செய்ய வேண்டும்" என சூரிய பகவானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். சூரிய பகவானுக்குரிய 108 போற்றி மந்திரங்களை சொல்லி வழிபடுவதும் சிறப்பானதாகும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதியன்று வியாழக்கிழமை வருகிறது. முன்னதாக ஜனவரி 14ம் தேதியன்று மக்கள் போகிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். பழையன கழிதலும், புதியன புகுதலுமாக போகிப் பண்டிகையை தொடர்ந்து, மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் அல்லது சூரிய பொங்கல் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பு பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைத்து வழிபட வேண்டும்.

இதுவே சூரிய பொங்கலாகும். காலை 6 மணிக்கு முன்பாக பொங்கல் வைத்து, வழிபட்டு விட்டால் பொங்கல் வைக்க நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவ்வளவு சீக்கிரமாக பொங்கல் வைக்க முடியாது என்பவர்கள் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.

பொங்கல் வைக்க நல்ல நேரம் :

காலை 04.30 மணி முதல் 6 மணி வரை

காலை 07.45 மணி முதல் 08.45 மணி வரை

காலை 10.35 முதல் பகல் 1 மணி வரை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.